
பெங்களூரு,
ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக இந்த ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 14 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு தரப்பில் டிம் டேவிட் 50 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், மார்கோ ஜான்சென், சாஹல், ஹர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 96 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் 12.1 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக நேஹல் வதேரா 33 ரன் எடுத்தார். பெங்களூரு தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பெங்களூரு அணியின் இந்த தோல்விக்கு பேட்ஸ்மேன்களின் சொதப்பல் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. முன்னணி வீரர்களான விராட் கோலி, படிதார், பில் சால்ட் உள்ளிட்டவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.
இந்நிலையில் இந்த போட்டியில் விக்கெட்டுகள் சரியும் போது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் எடுத்திருந்தால் பெங்களூரு வெற்றிக்கு போராடி இருக்கலாம் என்று இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். ஆனால் அந்த பொது அறிவு கூட இல்லாத பெங்களூரு பேட்ஸ்மேன்கள் மோசமான ஷாட்டுகளை அடித்து விக்கெட்டுகளை இழந்ததாக சேவாக் விளாசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "பெங்களூரு அணி மிகவும் மோசமாக பேட்டிங் செய்தது. அவர்கள் அனைவருமே பொறுப்பற்ற ஷாட்டுகளை அடித்து விக்கெட்டை இழந்தார்கள். அவர்களில் ஒரு பேட்ஸ்மேன் கூட நல்ல பந்தில் விக்கெட்டை இழக்கவில்லை. ஒருவேளை அவர்களுடைய கையில் விக்கெட்டுகள் இருந்திருந்தால் 14 ஓவரில் 110 -120 ரன்கள் எடுத்திருக்கலாம். அது வெற்றிக்கு போராடுவதற்கான வாய்ப்பைக் கொடுத்திருக்கும்.
ஆனால் அவர்களுடைய ஒரு பேட்ஸ்மேன் கூட இந்த பொது அறிவை பயன்படுத்தியதாக தெரியவில்லை. ரஜத் படிதார் ஏதேனும் தீர்வுடன் வரவேண்டும். அவர்கள் சொந்த மண்ணில் வெற்றி பெறவில்லை. அவர்களுடைய பவுலர்கள் நன்றாக செயல்படுகிறார்கள். ஆனால் ஏன் சின்னசாமி மைதானத்தில் அவர்களது பேட்டிங் தொடர்ச்சியாக சொதப்புகிறது? சொந்த மண்ணில் நீங்கள் தொடர்ச்சியாக இப்படி தடுமாறினால் விஷயங்கள் சரியாக இல்லை என்று அர்த்தம். இதை யார் சரி செய்வார்?" என்று கூறினார்.