பெங்களூரு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

3 months ago 13

பெங்களூரு,

பெங்களூருவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழைக்கு மத்தியிலும் பெங்களூரு ஹெண்ணூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பாபுசாப் பாளையாவில் புதியதாக 6 மாடி கட்டிடம் கட்டும் பணிகள் நடந்து வந்தன. இந்த கட்டிடப் பணியில் வடமாநில தொழிலாளிகள் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலை 3 மணியளவில் கனமழை கொட்டி தீர்த்தது. அந்த சமயத்தில் அந்த 6 மாடி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் கட்டிடத்திற்குள் நின்று வேலை பார்த்து வந்த கூலி தொழிலாளிகள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். வெளியே நின்று வேலை பார்த்த தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்து தப்பி ஓடி உயிர் தப்பினர்.

உயிர் தப்பிய தொழிலாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் ஹெண்ணூர் போலீசார், மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொக்லைன் எந்திரம் உதவியுடன் அங்கு மீட்பு பணிகளை தொடங்கினர். 16 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 6 பேர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டிடம் விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளர் மகன் மோகன், ஒப்பந்ததாரர் முனியப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் நிறைவடைந்த பிறகு சட்ட நடவடிக்கை தொடரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Read Entire Article