மீனம்பாக்கம்: பெங்களூர் விமானநிலையத்தில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டதால், அங்கு விமானங்கள் நிறுத்துவதற்கு போதிய இடமில்லாத சூழல் ஏற்பட்டது. இதனால் அங்கு சென்ற 5 விமானங்கள் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டு தரையிறங்கின. இதனால் இங்கு பரபரப்பு நிலவியது. பெங்களூர் விமானநிலையத்தில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டது. இதனால் அங்கு விமானங்கள் நிறுத்துவதற்கு போதிய இடமில்லாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று நள்ளிரவு பெங்களூருக்கு சென்ற 2 சர்வதேச விமானங்கள் உள்பட 5 விமானங்கள் சென்னை விமானநிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டு தரையிறங்கின.
பின்னர், இன்று அதிகாலை பெங்களூர் விமான நிலையத்தில் போக்குவத்து நெரிசல் ஓரளவு குறைந்த பிறகு, சென்னையில் நிறுத்தப்பட்டு இருந்த 5 விமானங்களும், ஒன்றன்பின் ஒன்றாக பெங்களூருக்குப் புறப்பட்டு சென்றன. இதில் பெங்களூர் செல்ல வேண்டிய பயணிகள், சென்னையில் நீண்ட நேரம் விமானத்துக்குள் அமர்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் பெரிதும் அவதிப்பட்டனர். அதன்படி, ஐதராபாத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 12.20 மணியளவில் 135 பயணிகளுடன் பெங்களூருக்கு சென்ற இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், ஹாங்காங்கிலிருந்து 296 பயணிகளுடன் பெங்களூருக்கு சென்ற கேத்தே-பசிபிக் ஏர்லைன்ஸ் விமானம், நாக்பூரிலிருந்து நேற்று நள்ளிரவு 12.50 மணியளவில் பெங்களூருக்கு 127 பயணிகளுடன் சென்ற இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், கோவாவிலிருந்து நள்ளிரவு 1.20 மணியளவில் 154 பயணிகளுடன் பெங்களூர் சென்ற இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்,
பிராங்க்பர்ட்டில் இருந்து நள்ளிரவு 1.55 மணியளவில் 327 பயணிகளுடன் பெங்களூருக்கு சென்ற லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமானம் என மொத்தம் 5 விமானங்கள் பெங்களூர் விமானநிலையத்தில் போதிய இடம் இல்லாததால் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டு தரையிறங்கின. சென்னையில் தரையிறங்கிய 5 விமானங்களின் பயணிகளும் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டு இருந்தனர். அப்பயணிகளுக்கு அந்தந்த ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் குடிநீர், சிற்றுண்டி போன்றவை வழங்கப்பட்டன. பின்னர் இன்று அதிகாலை பெங்களூரில் விமான போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்ததும், அங்கு விமானங்களை நிறுத்துவதற்கு போதிய இடம் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் சென்னை விமானநிலையத்துக்கு அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 விமானங்களும் இன்று அதிகாலை 2.20 மணியில் இருந்து 3.55 மணிக்குள் ஒன்றன் பின் ஒன்றாக சென்னையில் இருந்து பெங்களூர் விமான நிலையத்துக்குப் புறப்பட்டு சென்றன. இதனால் இந்த 5 விமானங்களில் இருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் நீண்ட நேரம் விமானத்துக்குள் அமரும் நிலை ஏற்பட்டதால் பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் சென்னை விமானநிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
The post பெங்களூரில் விமானங்கள் நிரம்பியதால் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 5 விமானங்கள் appeared first on Dinakaran.