'பூரி ஜெகன்நாதரின் பக்தர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்' - ஒடிசா முதல்-மந்திரி

1 week ago 2

புவனேஸ்வர்,

ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற ஜெகன்நாதர் கோவில் ரத யாத்திரை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடந்து வருகிறது. இதில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

ரத யாத்திரையின் 2-வது நாளான நேற்று ரதங்களில் இருந்த 3 சாமிகளுக்கான திரைகளை அகற்றுவதற்காக பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது, அதிகாலை 4 மணியளவில் குண்டிசா கோவில் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக 2 காவல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி உத்தரவிட்டு உள்ளார். இந்நிலையில், இந்த சம்பவத்திற்காக பூரி ஜெகன்நாதரின் பக்தர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"சாரதாபலி கோவிலில் மகாபிரபுவை ஒரு முறையாவது நேரில் காண வேண்டும் என்ற தீவிர ஆவலுடன் பக்தர்கள் இருந்ததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது. தனிப்பட்ட முறையில், நானும் எனது அரசாங்கமும் ஜெகன்நாதரின் பக்தர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறோம்.

சாரதாபலி கோவிலில் உயிரிழந்த பக்தர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துக்கத்தைத் தாங்கும் வலிமையை அவர்களுக்கு வழங்குமாறு மகாபிரபு ஜெகன்நாதரிடம் பிரார்த்திக்கிறோம்.

இந்த அலட்சியம் மன்னிக்க முடியாதது. பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும். இதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் உத்தரவிட்டுள்ளேன்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read Entire Article