
லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 60 ரன்கள் அடித்தார். லக்னோ தரப்பில் ரவி பிஷ்னோய் மற்றும் ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்க்ரம் - ரிஷப் பண்ட் களமிறங்கினர். இதில் பண்ட் நிதானமாக விளையாட மார்க்ரம் அதிரடியாக களமிறங்கினார். ஒரளவு தாக்குப்பிடித்து விளையாடிய பண்ட் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து மார்க்ரமுடன் கை கோர்த்த நிக்கோலஸ் பூரனும் அதிரடியில் பட்டையை கிளப்ப லக்னோ வெற்றியை நோக்கி வெகுவாக முன்னேறியது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அரைசதம் அடித்த சிறிது நேரத்திலேயே மார்க்ரம் 58 ரன்களிலும், நிக்கோலஸ் பூரன் 61 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இவர்கள் ஆட்டமிழந்த பின் குஜராத் பந்துவீச்சாளர்கள் லக்னோ அணிக்கு சிறிது நெருக்கடி கொடுத்தனர். டேவிட் மில்லர் 11 பந்துகளை எதிர்கொண்டு 7 ரன்கள் மட்டுமே அடித்தது ஆட்டத்தை இறுதி ஓவர் வரை கொண்டு சென்றது. இருப்பினும் இறுதி கட்டத்தில் ஆயுஷ் பதோனி 28 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த லக்னோ 186 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.