பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைபாளையம் கிராமத்தில் தனியார் பள்ளியில், பூப்படைந்த மாணவியை வகுப்பறையின் வெளியில் அமரவைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி வருகின்றார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் கடந்த 5-ம் தேதி பூப்பெய்தி உள்ளார். இந்நிலையில் தற்பொழுது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெறுவதால் தேர்வு எழுதுவதற்காக வகுப்பறைக்கு சிறுமி வந்துள்ளார். ஆனால் சிறுமியை வகுப்பறைக்குள் அனுமதிக்காத பள்ளி நிர்வாகம் சிறுமியை 7-ம் தேதி அறிவியல் தேர்வும், 9-ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகளையும் மற்ற மாணவிகளுடன் அமர்ந்து எழுத விடாமல் வகுப்பறை வாசலில் அமர வைத்து எழுத வைத்துள்ளதாக கூறப்படுகிறது.