பெங்களூரு: பெலகாவியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் 2025ல் கட்சியை பூத் மட்டத்தில் இருந்து பலப்படுத்த வேண்டும் என்றும் இன்று முதல் 2026 வரை 13 மாதம் தொடர்ந்து ஜெய் பாபு , ஜெய் பீம் என்ற பெயரில் விழா நடத்தப்படும் என்கிற இரண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் கடந்த 1924ல் காங்கிரஸ் கட்சியின் 39வது செயற்குழு கூட்டம் நடந்தது. மகாத்மா காந்தி அடிகள் தலைமையில் நடந்த கூட்டத்தில் சுதந்திரம் அடைவதே இலட்சியம் என முடிவு செய்யப்பட்டது. காந்தி அடிகள் பங்கேற்ற செயற்குழு கூட்டத்தின் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் பெலகாவியில் காங்கிரஸ் கட்சி தேசிய காரிய கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் நடந்த கூட்டத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி முன்னிலை வகித்தார்.
முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார், காங்கிரஸ் கட்சி தேசிய பொது செயலாளர்கள் கேசி வேணுகோபால், ரணதீப் சிங் சுர்ஜே வாலா என 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தேசிய பொது செயலாளர் கேசி வேணுகோபால் நிருபர்களிடம் கூறியதாவது:
பெலகாவி செயற்குழுவில் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் இரண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல் தீர்மானத்தின்படி கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 2025ல் கட்சி பூத் அளவில் இருந்து மேலும் பலப்படுத்தப்படும். கட்சி பதவி வழங்கும் போது கட்சியின் நலனிற்காக செயல்படும் நபர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இரண்டாவதாக இன்று முதல் 13 மாதங்கள் ஜெய் பாபு ,ஜெய் பீம் என்ற பெயரில் விழா நடத்தப்படும். 2026 வரை ஒவ்வொரு மாதமும் இந்த நிகழ்ச்சி நடைபெறும். கிராமம், தாலுகா, மாவட்டம் என கட்சியை பலப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்படும். சுதந்திர போராட்டத்திற்கும் பாஜவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சுதந்திரத்திற்காக போராட்டம் நடத்தினர்.
ஆனால், பாஜவினர் தற்போது வரலாற்றை மாற்றி எழுதுவதற்காக முயற்சி மேற்கொள்கின்றனர்’ என்றார். பெலகாவி மாநகரில் 100 வருடங்களுக்கு முன்பு காந்தி அடிகள் தலைமையில் காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி , பிரியங்கா காந்தி எம்.பி பங்கேற்கவில்லை.
The post பூத் மட்டத்தில் இருந்து கட்சியை வளர்க்க வேண்டும் 2026 வரை ஜெய்பாபு, ஜெய்பீம் விழா: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.