புவிசார் குறியீடு பெறுவதற்கு வழங்கப்படும் மானியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்ந்துள்ளது: சட்டசபையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

2 hours ago 1

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது ஜி.கே.மணி( பாமக) பேசுகையில், “பென்னாகரம் தொகுதியில் புளி ஏராளமாக சாகுபடி செய்யப்படுவதால் அதனை பதப்படுத்த அரசு மானியத்துடன் கடன் உதவி வழங்குமா? இப்பகுதியில் விளையும் புளிக்கு அரசு புவிசார் குறியீடு பெற்று தருமா? என்றார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், “தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் 445 ஏக்கர் பரப்பளவில் புளி சாகுபடி செய்யப்பட்டு, 2 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. புளிய மரத்தில் இருந்து பெறப்படும் புளியிலிருந்து ஓடு, நார், புளியங் கொட்டையை ஆகியவற்றை நீக்கி அதனை பதப்படுத்தி பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இந்த தொழிலில் சுமார் 500 குடும்பங்கள் சிறிய அளவில் ஈடுபட்டுள்ளன. தருமபுரி மாவட்டத்தில் புளி பதப்படுத்தும் தொழில் செய்வதற்கு 10 தொழில்முனைவோருக்கு ரூ. 34 லட்சம் மானியத்துடன் ரூ. 2 கோடியே 89 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. புளி பதப்படுத்தும் தொழில் செய்ய முன்வரும் தொழில்முனைவோருக்கு துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் 5 சுய வேலைவாய்ப்பு திட்டங்களில் கீழ் மானியத்துடன் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

புவிசார் குறியீடானது வேளாண் பொருள்கள், உணவு பொருள்கள், கைவினை பொருள்கள் உற்பத்தி சார்ந்த பொருள்களுக்கு வழங்கப்படுகிறது. இந்திய அளவில் 69 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழ்நாடு 2ம் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் அறிவுசார் சொத்துரிமையை பாதுகாத்து தமிழ்நாட்டின் பெருமைய உலகிற்கு உணர்த்தும் வண்ணம் முதல்வர் கடந்த சனிக்கிழமை அன்று புவிசார் குறியீடு பெறுவதற்கு வழங்கப்படும் மானியத்தை ரூ. 25 ஆயிரத்தில் இருந்து ரூபாய் ஒரு லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார்கள்.

இந்த தருணத்தில் துறையின் சார்பில் முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்றால், அப்பொருள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து தோன்றிருக்க வேண்டும். அதற்கான வரலாற்று சான்றும் இருக்க வேண்டும். அப்பொருளுக்கும் அப்பகுதிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உள்ள தொடர்பு உறுதிபடுத்தப்பட வேண்டும். அதற்குரிய ஆவணங்களை தேடி பெற்று, புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மனோ தங்கராஜ்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பல வகையான வாழைகள் சாகுபடி செய்யப்படுவதால் அதனை பயன்படுத்தும் வகையில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க அரசு முன்வருமா?

அமைச்சர் தா.மோ.அன்பரசன்: தமிழகத்தில் குறிப்பிட்ட பகுதிகளில், சில விலை பொருட்கள் குறிப்பிட்ட காலத்தில் அதிக அளவில் விளையும். அவ்வாறு விளையும் பழங்கள், பூக்கள் இதர வேளாண் விளைபொருட்கள் வீணாகாமல் தடுக்க பதப்படுத்தும் தொழிற்சாலைகளை நிறுவ அரசு முயற்சிகள் மேற்கொள்ளும். இருப்பினும், தனியார் தொழில்முனைவோர் இத்தொழில் சாலைகளை அமைக்க முன்வரும் பட்சத்தில் அவர்கள் தொழில் தொடங்குவதற்கு ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் வழங்கப்படும். அவ்வாறு, தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு எம்எஸ்எம்இ துறையின் மூலம் செயல்படுத்தப்படும் 5 வகையான சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவிகள் வழங்கப்படும். மேலும், 20 தொழில் முனைவோர்கள் சேர்ந்து வந்தால் குறுங்குழும திட்டத்தின் கீழ் பொது வசதி மையம் அமைக்க பரிசீலிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

The post புவிசார் குறியீடு பெறுவதற்கு வழங்கப்படும் மானியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்ந்துள்ளது: சட்டசபையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article