நியூயார்க்,
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், விரைவில் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதற்காக அந்த ராக்கெட்டை தொடர்ந்து சோதித்து வருகிறது. விண்வெளிக்கு அனுப்பிவிட்டு பூமிக்கு கொண்டு வந்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 4 முறை நடத்தப்பட்ட சோதனைகளின் போது ராக்கெட்டின் 2-ம் நிலையான பூஸ்டர் பூமியில் தரையிறங்குவதற்கு முன்பே நடுவானில் வெடித்து சிதறியது.
இந்த நிலையில் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் பூஸ்டரை பத்திரமாக தரையிறக்கும் நோக்கத்துடன் நேற்று 5-வது முறையாக அந்த ராக்கெட் சோதிக்கப்பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, ஆட்கள் யாரும் இன்றி வெற்று விண்கலத்துடன் ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. சற்று நேரத்துக்கு பிறகு ராக்கெட் இரண்டாக பிரிந்து பூஸ்டர் பகுதி பூமியை நோக்கி செங்குத்தாக கீழே இறங்க தொடங்கியது. எப்படி புறப்பட்டு சென்றதோ அதுபோலவே நெருப்பை கக்கியபடி மெல்ல மெல்ல கீழே இறங்கியது.
இறுதியில் ராக்கெட் செலுத்தும் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த உலோக கரங்கள் பூஸ்டர் பகுதியை பிடித்தது. அதாவது, புவி ஈர்ப்பு விசையை மீறி மீண்டும் ஏவுதளத்திற்கே ராக்கெட் திரும்பியது. இதன் மூலம் உலகில் முதல் முறையாக ராக்கெட்டின் பூஸ்டர் பகுதியை வெற்றிகரமாக தரையிறக்கி ஸ்பேக்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தினர் கொண்டாடி மகிழ்ந்தனர். எலான் மஸ்க்கும் இதன் வீடியோ காட்சிகளை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.