புழல் பகுதியில் பயன்படுத்தப்படாத அரசு கட்டிடத்தில் தபால் நிலையம் அமைக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

2 hours ago 2

புழல்: சென்னை புழல் காந்தி பிரதான சாலையில் செங்குன்றம் வருவாய்த்துறை அலுவலகம் பல ஆண்டுகளாக அரசு கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. பின்னர் அந்த அலுவலகம் 2018ம் ஆண்டு முதல் செங்குன்றம் பகுதிக்கு மாற்றப்பட்டது. புழல் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு பல்வேறு அரசு சான்றிதழ்கள் பெறுவதற்கு மாதவரம் வருவாய் துறை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. இந்த அலுவலகம் மாதவரம் மண்டல மாநகராட்சி அலுவலகம் அருகில் அரசு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் இங்கு உள்ள அலுவலக கட்டிடத்தை யாரும் பயன்படுத்தாமல் உள்ளதால் கட்டிடத்தை சுற்றி குப்பைக் கழிவுகளும் போடப்பட்டு உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும் வளாகத்தில் தேசிய கொடி கம்பம் பயனற்ற நிலையில் உள்ளது.

இதன் அருகில் அரசு கிளை நூலகம் உள்ளது. நூலகத்துக்கு வரும் வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு சென்று புத்தகங்கள் நாளிதழ்கள் படித்து செல்லும் நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த கட்டிடத்தை யாரும் பயன்படுத்தாமல் உள்ளதால், கட்டிடத்தின் உள்ளே விஷப்பூச்சிகள் பூரான் போன்ற பூச்சிகள் அதிக அளவில் உள்ளது. எனவே பழைய வருவாய் துறை அலுவலக கட்டிடத்தை புதுப்பித்து, அரசு சம்பந்தப்பட்ட அலுவலகங்களை அமைக்க வேண்டும் என ஏற்கெனவே சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் புழல் மத்திய சிறைச்சாலை அருகில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் முதல் மாடியில் வாடகைக்கு புழல் தபால் நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இதனால் தபால் நிலையத்திற்கு பல்வேறு பணிகள் சம்பந்தமாக வருகை தரும் பொதுமக்கள் மற்றும் தபால் துறை ஊழியர்கள் முதல் மாடியில் படி ஏறி இறங்கி வருவதனால் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக முதியவர்கள் பெண்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்து செல்கின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாடகை கட்டிடத்திலே இயங்கும் புழல் தபால் துறை அலுவலகம் புழல் காந்தி பிரதான சாலையில் உள்ள பயன்படுத்தாமல் உள்ள அரசு கட்டிடத்தில் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க மாதவரம் வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர் கூறுகையில், புழல் தபால் துறை அலுவலகம் புழல் மத்திய சிறைச்சாலை அருகில் தனியாருக்கு சொந்தமான முதல் மாடியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதனால் அலுவலகத்துக்கு வரும் முதியவர்கள் பெண்கள் பல படிகளை கடந்து சென்று பணிகளை முடித்து திரும்பும் போது பல சிரமங்கள் ஏற்படுகிறது. இதனால் தபால் ஊழியர்கள் பொதுமக்கள் பலர் சிரமப்பட்டு வந்து செல்கிறார்கள்.

இந்நிலையில் இங்கு உள்ள தபால் நிலையத்தை அகற்ற வேண்டும் என தனியார் நிறுவனத்தினர் தெரிவித்துள்ள நிலையில், தபால் துறை அதிகாரிகள் புழல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தபால் நிலையத்தை மாற்றுவதற்கு இடம் தேடி வருகின்றனர். எனவே அரசுக்கு சொந்தமான பழைய வருவாய்த்துறை அலுவலகம் கட்டிடம் காலியாகவே உள்ளது. எனவே அந்த இடத்தில் புழல் தபால் நிலையம் அமைக்க வேண்டும். இதனால் புழல், காவாங்கரை, கன்னடபாளையம் கண்ணப்ப சாமி நகர், புனித அந்தோனியா நகர், அண்ணா நினைவு நகர், எம்.ஜி.ஆர். நகர், பாலாஜி நகர், மேக்ரோ மார்வெல் நகர், கதிர்வேடு, கலெக்டர் நகர் உள்பட பல்வேறு பகுதி மக்கள் பயனடைவார்கள். எனவே சம்மந்தப்பட்ட மாதவரம் வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயனில்லாமல் உள்ள பழைய வருவாய் துறை அலுவலகத்தில் புழல் தபால் நிலையத்தை மற்ற அரசு விதிமுறைப்படி வாடகைக்கு அனுமதிக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

The post புழல் பகுதியில் பயன்படுத்தப்படாத அரசு கட்டிடத்தில் தபால் நிலையம் அமைக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article