புழல், ஜன. 19: சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, புழல் சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையில் கன்டெய்னர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை புழல் சைக்கிள் ஷாப், சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்திலிருந்து செங்குன்றம் நோக்கிச் செல்லும் சர்வீஸ் சாலையில், தனியார் கன்டெய்னர் குடோன் உள்ளது. சென்னை துறைமுகம் மற்றும் எண்ணூர் துறைமுகம் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி இந்த குடோனுக்கு ஏராளமான கன்டெய்னர் லாரிகள் வந்து செல்கின்றன.
புழல் சைக்கிள் ஷாப் மேம்பாலம் அருகில் இருந்து சர்வீஸ் சாலையில் ஏராளமான கன்டெய்னர் லாரிகள் வரிசையாக நிற்பதால் அடிக்கடி போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், சர்வீஸ் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டுச் சென்று வருகின்றனர். பல நேரங்களில் கன்டெய்னர் லாரிகள் சர்வீஸ் சாலையில் நிற்பதால், தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்றும் இந்த கன்டெய்னர் லாரிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சம்பந்தப்பட்ட மாதவரம் போக்குவரத்து போலீசார், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து சர்வீஸ் சாலையில் நிற்கும் கன்டெய்னர் லாரிகள் உடனுக்குடன் குடோனுக்குச் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை புழல் சைக்கிள் ஷாப், மத்திய சிறைச்சாலை, சோதனைச் சாவடி, காவாங்கரை, தண்டல் கழனி, சாமியார் மடம், செங்குன்றம், மார்க்கெட் மற்றும் பைபாஸ் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள சாலையின் இரண்டு பக்கங்களிலும் கனரக வாகனங்கள் சர்வீஸ் சாலைகளிலே நிற்கின்றன. இதனால் இந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், குறிப்பாக பைக்கில் செல்பவர்கள் சிரமப்பட்டு சென்று வருகின்றனர்.
ஒருசில நேரங்களில் சர்வீஸ் சாலையில் நிற்கும் லாரிகளை பின்னோக்கி எடுப்பதால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட மாதவரம், செங்குன்றம் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து சர்வீஸ் சாலைகளில் பல நாட்களாக நிற்கும் லாரிகளை அப்புறப்படுத்த வேண்டும். அப்படி நடவடிக்கை எடுத்தால் சர்வீஸ் சாலையில் வாகன ஓட்டிகள் குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிம்மதி அடைவர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
The post புழல் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படும் கன்டெய்னர் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.