புழக்கத்தில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க முயற்சி; ரூ.500 நோட்டுக்கு ஆபத்து? டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பெயரில் ஒன்றிய அரசு புது திட்டம்

4 hours ago 2

நவம்பர் 8ம் தேதி இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்பு, மக்கள் அனைவரையும் நிலைகுலையச் செய்தது. ரூ.500, ரூ.1,000 நோட்டு இனி செல்லாது என்று அறிவித்தார். அதற்குப் பதிலாக புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், பணமதிப்பிழப்பு அறிவித்த அந்த நொடியில், கையில் பணம் இருந்தும் எல்லாம் இழந்து நடுத்தெருவுக்கு வந்து விட்டது போல் மக்கள் உணர்ந்தனர். நிறைய பணம் வைத்திருந்த பலர், நகைக்கடைகளை நோக்கிப் படையெடுத்தனர். சிலர், வேறு வழிகளில் பணத்தை மாற்ற முயற்சித்தனர். வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ள மிக நீண்ட வரிசையில் அப்பாவி மக்கள் பலர் காத்துக் கிடந்தனர். வெயிலில் சுருண்டு விழுந்தும், மாரடைப்பாலும், சில மருத்துவனைகள் மதிப்பிழந்த ரூபாய் நோட்டைப் பெற மறுத்ததால் சிகிச்சை பெற வழியின்றியும் பலர் இறந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்ததாக சில புள்ளி விவரங்கள் வெளியாகின.

கருப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறிய பிரதமர், ஒரே ஒரு முறை சிரமத்தைப் பொறுத்துக் கொள்ளுங்கள் என கேட்டுக் கொண்டார். ஆனால், கருப்புப் பணத்தை மீட்க முடியாததால், பின்னால் மன்னிப்புக் கேட்டார் என்பது வரலாறு. பண மதிப்பிழப்பால் கருப்புப்பணம் ஒழிந்ததாக வரலாறு இல்லை என்றபோதும், விஷப்பரீட்சையை நிகழ்த்திய ஒன்றிய பாஜ அரசு மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. பகிரங்கமாக பிரதமர் மன்னிப்புக் கேட்டதால், மீண்டும் இதுபோன்ற தவற்றை ஒன்றிய பாஜ அரசு செய்யாது என்று மக்கள் கருதிக் கொண்டிருக்கும் சமயத்தில், சத்தமின்றி ரூ.2,000 நோட்டுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் ஒன்றிய அரசு இறங்கியது. இதன்படி, வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.2,000 மீண்டும் ஏடிஎம்களில் வைக்கப்படுவதில்லை. வங்கிகள் மூலமாகவும் வழங்கப்படுவதில்லை. அனைத்தும் ரிசர்வ் வங்கிக்கு போய் விட்டது. பண மதிப்பிழப்பு இல்லாமேலயே ரூ.2,000 நோட்டு புழக்கம் அற்றுப் போய்விட்டது. ரூ.6,103 கோடி அளவுக்குத்தான் ரூ.2,000 நோட்டு புழக்கத்தில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது ரூ.500 நோட்டும் புழக்கத்தில் இருந்து முற்றிலும் நீக்கப்படலாம் என்ற பதை பதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த நிர்மலா சீதாராமன், ‘‘அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டு புழக்கத்தைக் குறைத்து, குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டு அதிக புழக்கத்தில் இருக்கச் செய்வதில் அரசு முனைப்புக் காட்டுகிறது. மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்க விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும்’’, என்றார்.

இதையடுத்து, ரூ.500 ரூபாய் நோட்டின் எதிர்காலம் குறித்து நிருபர்கள் கேட்டனர். இதற்குப் பதிலளித்த அவர், ‘‘ரூ.2,000 நோட்டு புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டது போல, குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டு அதிகமாக புழக்கத்தில் இருக்கும் வகையில் அரசு முயற்சி எடுக்கும். ரூ.2,000 நோட்டு தற்போது 0.02 சதவீதம் மட்டுமே தற்போது புழக்கத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது’’, எனக் கூறியுள்ளார். இதன் மூலம், ரூ.2,000 நோட்டுக்கு ஏற்பட்ட கதிதான் ரூ.500க்கும் ஏற்படப் போகிறது என்பது அப்பட்டமாக அம்பலம் ஆகிவிட்டதாக நிபுணர்கள் பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘வங்கிகள் ஏடிஎம்களில் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டு அதிகம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். 2025 செப்டம்பர் 30ம் தேதிக்குள், 75 சதவீத ஏடிஎம்களில் ஒரு கேசட்டிலாவது (பணம் வைக்கும் டிரே) ரூ.100 அல்லது ரூ.200 நோட்டு மட்டுமே இருக்க வேண்டும். நடப்பு நிதியாண்டுக்குள், அதாவது, 2026 மார்ச் 31ம் தேதிக்குள் இந்த நடைமுறை 90 சதவீத ஏடிஎம்களில் செயல் முறைக்கு வந்து விட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது. ரூ.500 நோட்டு காலப்போக்கில் ஏடிஎம்களில் இருக்கவே இருக்காது என இந்த சுற்றிக்கை தெரிவிக்காவிட்டாலும், நிர்மலா சீதாராமனின் பேட்டி, அடுத்த கட்ட நடவடிக்கையை அதை நோக்கித்தான் நகர்த்துவதாகத் தெரிகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

டிஜிட்டல் பரிவர்த்தனையால் கட்டணங்கள் அதிகரிக்கும்
டிஜிட்டல் பரிவர்த்தனை வெளிப்படைத் தன்மை வாய்ந்த, பாதுகாப்பான, எளிதான பரிவர்த்தனை எனக் கூறப்பட்டாலும், இன்று பல ஆன்லைன் பரிவர்த்தனைகளில் பயன்பாட்டுக் கட்டணம், வசதி கட்டணம் என விதிக்கப்படுகிறது. இது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தக் கூடியது. ரூ.200 பரிவர்த்தனை செய்யவே சில இணையதளங்களில் ரூ.5 சந்தை கட்டணமாகப் பெறப்படுகிறது. ரொக்கப் பரிவர்த்தனைகளில் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதில்லை. கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, ரொக்கப் பரிவர்த்தனை முந்தைய ஆண்டை விட 2.4 சதவீதம் அதிகரித்திருந்தது தெரிய வந்துள்ளது. இது மக்கள் பெரும்பாலும் ரொக்கப் பரிவர்த்தனையையே சார்ந்திருப்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

ரூ.500 ஒழிந்தால் எதிர்கொள்ளும் சிக்கல்கள்
ரூ.500 புழக்கத்தில் இருந்து ஒழிந்து விட்டால், ரூ.10, ரூ.50, ரூ.100, ரூ.200 ஆகிய குறைந்த மதிப்பிலான ரொக்கப்பணம் மட்டுமே மக்களிடம் இருக்கும். இது அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகளில் சிரமத்தை ஏற்படுத்துவதாக அமையும். அதிக மதிப்பிலான பொருட்களை வாங்க மக்கள் அதிக எண்ணிக்கையிலான ரூபாய் நோட்டுகளை பை நிறைய அல்லது பெட்டி நிறைய எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். திருமணம், வணிக ரீதியான பரிவர்த்தனைகளுக்கு அதிக தொகை கொண்டு செல்வது சிரமத்தை ஏற்படுத்தும்.

பாதுகாப்பாக அவற்றை கொண்டு செல்வதும், கையாள்வதும் கடினமாகும். இதற்குத் தீர்வாக டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என நிதியமைச்சர் கூறுகிறார். ஆனால், இன்று ஆன்லைன் மோசடிகளிலேயே பலர் வங்கிப் பணத்தை இழந்து வருகின்றனர். மேலும், சர்வதேச அளவில் அவ்வப்போது போர் பதற்றம் ஏற்பட்டு வருகிறது. இன்று டிரோன்கள் மூலமாக போர்கள் நடக்கின்றன. அடுத்ததாக சைபர் தாக்குதல்கள் ஆட்டிப் படைக்கின்றன. சைபர் தாக்குதல்களில் ராணுவ இணையதளங்கள், பெரிய நிறுவனங்களும், வங்கிகளுமே பெரும்பாலும் குறி வைக்கப்படுகின்றன. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மக்கள் வங்கியில் பணம் இருந்தும் இல்லாதவர்களாக ஆகி விடுவார்கள். அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

மேலும், பெருநகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையேயான பரிவர்த்தனைகள் பெரும்பாலும் ரொக்கமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. கிராமத்தில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்படும் காய்கறி, கீரை வகைகளுக்கு பணப் பரிவர்த்தனையே பிரதானமாக உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை கிராமங்களில் அத்தியாவசியமானதாக மாறவில்லை. கிராம மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தையே முடக்கும் வகையில் கூட இந்தச் செயல் அமையலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

அதிகரித்து வரும் ரூ.100, ரூ.200 புழக்கம்
ரூ.500 நோட்டை குறைக்க அரசு திட்டமிட்டு வரும் நிலையில் நடப்பு ஆண்டில் ஒவ்வொரு மாத இறுதியிலும் உள்ள புள்ளி விவரங்களின்படி ரூ.100, ரூ.200 நோட்டு புழக்கம் அதிகரித்து வந்துள்ளது.

பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ள முடியுமா?
2008ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார மந்த நிலையால் உலக அளவில் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டன. பியர் ஸ்டெர்ன்ஸ் என்ற பங்குச் சந்தை நிறுவனத்தின் வீழ்ச்சி ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் வீழ்ச்சியடையத் துவங்கின. இதன் தாக்கத்தில் இருந்து இந்தியா, இந்தோனேஷியா, போலந்து, சீனா, கொலம்பியா, ஸ்லோவாகியா, தென்கொரியா, உருகுவே ஆகிய நாடுகள் தான் தப்பித்தன. இந்தியா பெரிய அளவில் தப்பியதற்கு மக்களின் சேமிப்புதான் காரணம். ஆனால் இன்று மக்கள் சேமிக்கவே முடியாத அளவுக்கு வரிச்சுமையில் சிக்கித் தவிக்கின்றனர். பெரும்பாலான சிறு சேமிப்புத் திட்டங்களில் வட்டி குறைப்பால் மக்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நிலையில், கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் பணப்புழக்கத்துக்கு வேட்டு வைக்கும் செயலில் ஒன்றிய அரசு இறங்குவது அபாகரமானதாக பலராலும் கருதப்படுகிறது.

ஏடிஎம்களுக்கும் பாதிப்பு தான்
குறைந்த மதிப்பிலான நோட்டு மட்டுமே புழக்கத்தில் இருந்தால், ஏடிஎம்கள் விரைவில் காலியாகி விடும். அவற்றை அடிக்கடி நிரப்ப வேண்டி வரும். ஏடிஎம் மென்பொருள், உள்கட்டமைப்புகளை மாற்றி அமைக்க வேண்டியிருக்கும். கேசட்கள் எனப்படும் பணம் வைக்கும் டிரேக்களை குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப மாற்ற வேண்டி வரும். பணத்தை எளிதாகவும், விரைவாகவும் கையாள்வதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கருதப்படுகிறது.

The post புழக்கத்தில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க முயற்சி; ரூ.500 நோட்டுக்கு ஆபத்து? டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பெயரில் ஒன்றிய அரசு புது திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article