மாதவரம்: புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வனிதா (28), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு, கடந்த 2014ம் ஆண்டு திருமணமாகி 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்னை காரணமாக கணவரை பிரிந்து வனிதா தனியாக வாழ்ந்து வருகிறார். இவர், புரசைவாக்கம் பகுதியில் உள்ள தனியார் நகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 16ம்தேதி வனிதா வழக்கம்போல வேலைக்குச் சென்று விட்டார்.
தனது 7 வயது மகளை புளியந்தோப்பு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். அப்போது, குழந்தை தனது பாட்டி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது, எதிர்வீட்டின் அருகே வசிக்கும் சேகர் என்பவர் சிறுமியிடம் வீட்டில் டிவி பார்க்கலாம் வா என அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, சிறுமியின் ஆடைகளை கழற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி சிறுமியை அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாகவே சிறுமிக்கு உடலில் பாதிப்பு ஏற்பட்டு ஒருவித சோர்வாக இருந்துள்ளார். சந்தேகமடைந்த சிறுமியின் தாய், சிறுமியிடம் கேட்டபோது சிறுமி அழுது கொண்டே நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் வனிதா, நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சேகர் வீட்டுக்கு சென்று, இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது, சேகர் நான் தவறு செய்து விட்டேன், என்னை மன்னித்துவிடு. இதை பெரிதுபடுத்த வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
இதனால், கோபமடைந்த வனிதா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளார். இதுகுறித்து, அக்கம் பக்கத்தினர் புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற புளியந்தோப்பு போலீசார், சேகரை மீட்டு புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில், புளியந்தோப்பு பிரகாஷ் ராவ் காலனி பகுதியில் வசித்து வரும் சேகர் (56) என்பதும், இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனது வீட்டின் அருகே நடைபாதையில் உள்ள ஐயப்பன் கோயிலில் பூசாரியாக வேலை செய்து வந்ததும், சம்பவத்தன்று ஆசை வார்த்தைகூறி சிறுமியை அழைத்துச்சென்று பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து, சேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் தாக்கியதில் சேகருக்கு முகம் மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
The post புளியந்தோப்பில் பரபரப்பு 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கோயில் பூசாரிக்கு பொதுமக்கள் தர்ம அடி appeared first on Dinakaran.