புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் இரவு தங்கியிருந்து பக்தர்கள் தரிசனம்

3 months ago 18


திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இரவு கடற்கரையில் தங்கி வழிபட்டனர். அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் மட்டுமே அழகிய கடற்கரையோரம் அமைந்து உள்ளதால் சிறந்த ஆன்மீக தலமாக மட்டுமின்றி கடல் அழகை ரசிப்பதற்கு சுற்றுலா பயணிகளும் இங்கு அதிகமாக வருகின்றனர். திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும், புண்ணிய தீர்த்தமான கடல் மற்றும் நாழிக்கிணறில் நீராடிய பிறகே சுவாமியை வழிபடுகின்றனர். இக்கோயில் கடற்கரை மட்டுமில்லாது கடலுக்கு உள்ளேயும் தீர்த்தக்கிணறுகள் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே புண்ணிய தீர்த்தங்கள் நிறைந்த கடலில் கால் நனைத்த பிறகே சுவாமியை வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

மேலும் முருகப்பெருமானின் அவதார நோக்கம் நிறைவேறிய தலமான இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழாக் காலங்களில் லட்சக்கணக்கானோரும் வழிபட்டு செல்கின்றனர். கடந்த சில வருடங்களாக தமிழ் மாதங்களில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் மாலையில் திருச்செந்தூர் வந்து இரவு கடற்கரையில் தங்கி நிலா ஒளியில் விளக்கேற்றி வழிபட்டு, அங்கேயே தூங்கி, விழித்து அதிகாலையில் நாழிக்கிணறு மற்றும் கடலில் புனித நீராடி முருகப்பெருமானை வழிபட்டு திரும்புவதும் வாடிக்கையாகி வருகிறது. இதேபோல புரட்டாசி மாதத்தில் 2வது முறையாக நேற்று இரவு 7.54 மணிக்கு தொடங்கிய பவுர்ணமி, இன்று (அக். 17) மாலை 5.38 மணி வரை நீடிக்கிறது. இதையடுத்து நேற்று காலை முதலே பக்தர்கள் திருச்செந்தூர் வரத் தொடங்கினர்.

பவுர்ணமியை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நிலா ஒளியில் கடற்கரையில் தங்கினர். அவர்கள் இன்று அதிகாலை முதல் நாழிக்கிணறு மற்றும் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.

The post புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் இரவு தங்கியிருந்து பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Read Entire Article