பும்ரா சிறப்பாக செயல்பட நான் கொடுத்த ஆலோசனை முக்கிய காரணம் - ஆஸி. முன்னாள் வீரர்

1 month ago 5

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் 1 பவுலராக செயல்பட்டு வருகிறார். வித்தியாசமான ஆக்சனை பின்பற்றி பந்து வீசும் அவர் உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை கொடுத்து வருகிறார்.

குறிப்பாக அழுத்தமான சூழ்நிலையில் துல்லியமான யார்கர் பந்தை வீசும் அவர் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டை எடுத்துக் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வருகிறார்.

டி20 உலகக்கோப்பையில் மொத்தமாக 15 விக்கெட்டுகளை வெறும் 4.17 என்ற எக்கனாமியில் எடுத்த அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருது வென்றார்.

அதன் காரணமாக தற்சமயத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா தான் தமக்கு மிகவும் பிடித்த பவுலர் என்று எம்எஸ் தோனி பாராட்டியிருந்தார். அதே போல பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய பவுலர் என்று விராட் கோலி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும் பல முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பலரும் பும்ராவை பாராட்டி வருகின்றனர். தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் பும்ரா சிறப்பாக செயல்பட தான் கொடுத்த ஆலோசனை முக்கிய காரணம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மெக்ராத் கூறியுள்ளார். காயத்தை தவிர்த்து பவுலிங் செய்வதற்காக பும்ரா இளம் வயதில் இருந்தபோது தாம் ஆலோசனை கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் அந்த சமயத்தில் அதை அவரால் பின்பற்ற முடியவில்லை என்றும் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஜஸ்பிரித் இளம் வயதாக இருந்தபோது நான் பார்த்துள்ளேன். அப்போதே நல்ல வேகத்தைக் கொண்ட அவருடைய ஆக்சன் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. குறைந்த தூரம் ஓடிவந்த அவர் வேகமாக குதித்து பந்து வீசினார். அப்போது அவர் கிரீஸ்க்குள் நேராக சென்று வீசினால் நன்றாக இருக்கும் என்று நான் பரிந்துரைத்தேன். ஆனால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை.

பின்னர் அவர் தன்னுடைய முழங்காலில் காயத்தை சந்தித்தார் என்று நினைக்கிறேன். அப்போது அவர் தமக்குத்தாமே கிரீஸ்க்குள் சென்று பந்து வீசும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தார். அதற்கான பாராட்டுகளை நான் எப்போதும் எடுத்துக்கொள்ள போவதில்லை.

ஆனால் அவர் கடினமான பயிற்சியை மீண்டும் செய்தார். தற்போது அவர் கிரீஸ்க்குள் நேராக செல்கிறார். பந்துக்கு பின்னே தன்னுடைய கையை வைத்து வீசுவதால் அவரின் பந்து ஸ்டம்புகளை நோக்கி செல்கிறது. அது கண்டிப்பாக அவருக்கு பெரிய உதவியாக இருக்கிறது" என்று கூறினார்.

Read Entire Article