புனே டெஸ்ட்; எங்கள் 2வது இன்னிங்சில் நாங்கள் பதிலடி கொடுப்போம் என நம்புகிறேன் - மோர்னே மோர்கல்

2 months ago 12

புனே,

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. சுழலுக்கு சாதகமான இந்த மைதானத்தில் இரு அணிகளிலும் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தினர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும்,ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் அடித்தனர்.

இந்தியா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்களான சுந்தர் 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி மிட்செல் சான்ட்னரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 156 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் அடித்துள்ளது. டாம் பிளண்டெல் 30 ரன்களுடனும், கிளென் பிலிப்ஸ் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுந்தர் 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். நியூசிலாந்து இதுவரை 301 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், எங்கள் 2வது இன்னிங்சில் நாங்கள் பதிலடி கொடுப்போம் என நம்புவதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களுக்கு இடையே நான் எப்போதும் ஒப்பிட்டு பேசுவதில்லை. ஆனால் டெஸ்ட் போட்டியில் வெல்வதற்கு நீங்கள் முதல் இன்னிங்ஸில் ரன்கள் அடிக்க வேண்டும். அதை எங்களால் செய்ய முடியவில்லை. எங்களுடைய பேட்டிங் வரிசையில் உலகத்தரமான வீரர்கள் உள்ளனர்.

அவர்களுக்கு அதை செய்வதற்கான செயல்முறைகள் தெரியும். அந்த தவறுகளை நாங்கள் திருத்திக் கொள்வோம் என்று நம்புகிறோம். ஏனெனில் தற்சமயத்தில் அது எங்களுக்கு பெரிய சோதனையை கொடுத்துள்ளது. இந்திய அணியில் இந்த தவறை திருத்திக் கொள்வதற்கு தேவையான நிறைய அனுபவம் இருக்கிறது. எனவே இரண்டாவது இன்னிங்ஸில் வலுவாக அவர்கள் மீண்டும் வருவார்கள் என்று நான் நம்புகிறேன்.

இந்த சூழ்நிலையை சமாளித்து எப்படி அவர்கள் கம்பேக் கொடுக்கிறார்கள் என்பதைப் பார்க்க நான் ஆவலுடன் உள்ளேன். இது வேடிக்கையான விளையாட்டு. அட்டாக் செய்யக்கூடிய எங்களுடைய வீரர்களுக்கு இந்த சூழ்நிலையில் நன்றாக தெரியும். அது உண்மையில் மிகவும் கடினம். ஆனால் ஏதேனும் ஒரு வீரர் உத்வேகத்தை எடுத்துக்கொண்டு சண்டையிட்டு டாப் செயல்பாட்டை வெளிப்படுத்துவதற்கு இது அற்புதமான வாய்ப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article