புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் 19 இளம் வல்லுநர்களுக்கு சான்றிதழ் - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

2 months ago 15

சென்னை,

முதல்-அமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் 19 இளம் வல்லுநர்களுக்கு "பொதுக் கொள்கை மற்றும் மேலாண்மையில்" முதுகலைச் சான்றிதழ்களை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் இன்று (25.10.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் (Tamil Nadu Chief Minister's Fellowship Programme), இரண்டு வருடம் முழுமையாக நிறைவு செய்த 19 இளம் வல்லுநர்களுக்கு "பொதுக் கொள்கை மற்றும் மேலாண்மையில்" (Post Graduate Certificate in Public Policy and Management) முதுகலைச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது;-

"தமிழ்நாடு முதல்-அமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள உங்களுக்கு, சிறப்புத்திட்டச் செயலாக்கத்துறை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மூலமாக Post Graduate Certificate in Public Policy and Management எனும் முதுகலை சான்றிதழை வழங்குவதில் நான் மிகுந்த பெருமையடைகிறேன்.

முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசை பொறுத்தவரை, 'எல்லோருக்கும் எல்லாம்' என்கிற திராவிட மாடல் தத்துவத்தை முன்னிறுத்தி செயல்படுகின்ற அரசு. மக்களுக்கான தேவைகளை அறிந்து, அவற்றிற்கான தீர்வுகளை இன்னும் வேகமாக அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான், நம்முடைய முதல்-அமைச்சர், புத்தாய்வுத் திட்டத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு துவங்கி வைத்தார்.

இந்த திட்டத்திற்கு கிட்டத்தட்ட 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இரண்டு கட்டத்தேர்வு மற்றும் இன்டர்வியூ நேர்காணலின் அடிப்படையில் 30 பேர் தேர்வு செய்யப்பட்டீர்கள். அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி மூலம், தமிழ்நாடு அரசே அரசுத்துறை செயல்பாடுகள் குறித்த பயிற்சிகளை உங்களுக்கு வழங்கியது.

அதனடிப்படையில், நம்முடைய தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் சிறப்புத்திட்டச் செயலாக்கத்துறையின் ஒருங்கிணைப்பில், நீங்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக செயல்பட்டீர்கள். அரசால் உங்களுக்கும், உங்களால் அரசுக்கும் பலன் அளிக்கும் வகையில்தான் இந்த திட்டத்தை நம்முடைய முதல்-அமைச்சர் செயல்படுத்தினார்.

நீங்கள் அனைவரும் மக்களுக்கும், அரசுக்கும் ஒரு பாலமாக இருந்து, பல்வேறு புதுமையான யோசனைகளையும், தீர்வுகளையும் தந்தீர்கள். வீட்டு வசதித்துறை, சமூகநலத்துறை, நீர்வளத்துறை, மருத்துவத்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை என பல்வேறு துறைகளில் நீங்கள் திறமையுடன் செயல்பட்ட விதம் குறித்து நான் நன்கு அறிவேன்.

நேற்றுக் கூட, நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பாக 'முதல்-அமைச்சர் கோப்பை 2024 நிறைவு விழா நடைபெற்றது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான, அந்த கேப்சன்ஸ் 'களம் நமதே' , 'இது நம்ம ஆட்டம்' என்ற வார்த்தைகளை பரிந்துரைத்து, அவற்றை தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்க்க துணை நின்றவர்கள் நீங்கள்தான்.

உங்களுக்கு, கடந்த இரண்டு ஆண்டு காலமாக மாதம் 65 ஆயிரம் ரூபாய் அளவுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல, உங்கள் இதர செலவினங்களுக்காக மாதம் 10 ஆயிரம் ரூபாயை நம்முடைய கழக அரசு வழங்கியது. இந்தியாவிலேயே இந்த அளவுக்கு ஊதியத்தை போன்றதொரு உதவித்தொகையை அளித்து, சான்றிதழும் தருகின்ற ஒரே மாநிலம், நம்முடைய தமிழ்நாடு மட்டும்தான்.

இந்த சிறப்புக்குரிய திட்டத்தில் இணைந்து பணியாற்றும் போதே, சிலருக்கு மத்திய அரசுப்பணி, மாநில அரசுப்பணி போன்ற பணி வாய்ப்புகள் கிடைத்தன. கிட்டத்தட்ட மாதம் 2 லட்சம் ரூபாய் அளவுக்கு ஊதியத்துடன் கூட சிலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. சிலர் அந்தப்பணிகளுக்கு சென்றாலும், பயிற்சியை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டவர்கள்தான் நீங்கள். அந்த வகையில், இங்கே இருக்கின்ற நீங்கள் அனைவரும் அரசினுடைய பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரியவர்கள்.

இன்றைக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம் மூலமாக PG Certification முடித்து வெளியேறுகிறீர்கள் என்றால், இந்த 2 ஆண்டுகளில் நம் அரசின் மூலம் பெற்ற அனுபவத்தோடு மக்களை நோக்கி நீங்கள் அனைவரும் செல்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். உங்கள் திறமையும், அறிவும் இந்த சமூகத்துக்கு இன்னும் அதிகமாக பயன்படட்டும்.

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்திற்கு அடுத்த பேட்ச் மாணவர்களை விரைவில் தேர்ந்தெடுக்கவுள்ளோம். ஆகவே, அவர்களுக்கும் நீங்கள் வழிகாட்டலாம். நீங்கள் எப்போதும் நம்முடைய அரசுடன் இணைந்து செயல்படலாம் என்று கேட்டுக் கொள்கின்றேன். முதல்-அமைச்சருடைய புத்தாய்வு திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ள உங்கள் அனைவரின் வாழ்விலும் புத்தொளி பரவட்டும். எதிர்காலம் சிறக்கட்டும். உங்கள் அனைவருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 

Read Entire Article