புத்தாண்டை வரவேற்க புதிய அம்சங்கள்; சிவகாசியில் 2025ம் ஆண்டு காலண்டர் இறுதிக்கட்ட தயாரிப்பு பணி விறுவிறு: ‘கியூஆர் கோடு’ மூலம் எம்எல்ஏ தொகுதியை அறியலாம்

4 weeks ago 7

சிவகாசி: சிவகாசியில் 2025ம் ஆண்டுக்கான புதிய காலண்டர் தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வெளியூர்களுக்கு காலண்டர்களை அனுப்பும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. புத்தாண்டு காலண்டரில் புதிய அம்சமாக ‘கியூ ஆர் கோடு மூலம் தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏ தொகுதியின் விவரங்களை அறியலாம். விருதுநகர் மாவட்டத்தில் குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சுத் தொழில் ஆகியவை மிகமுக்கிய தொழில்களாக திகழ்கின்றன. அச்சுத் துறையில் ஆண்டுதோறும் காலண்டர் தயாரிப்பு மிக முக்கிய அம்சமாக உள்ளது.

2025ம் ஆண்டு காலண்டர் தயாரிப்பு பணி கடந்த 4 மாதங்களுக்கு முன் தொடங்கிய விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிவகாசியில் 50க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்கள் தினசரி மற்றும் மாத காலண்டர்கள் தயாரிக்கும் பணியில் பிரத்யேகமாக ஈடுபட்டுள்ளன. மேலும், மாதக் காலண்டர் தயாரிப்பில் நூற்றுக்கணக்கான அச்சகங்களும் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வந்த காலண்டர் தயாரிப்பு பணி தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. 2025ம் ஆண்டுக்கான காலண்டர்களை வெளியூருக்கு அனுப்பும் பணி 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பாக்கியுள்ள ஆர்டர்கள் விரைவில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட காலண்டர் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இது குறித்து காலண்டர் தயாரிப்பாளர்கள் கூறுகையில், ‘புத்தாண்டிற்கான தினசரி மற்றும் மாதக் காலண்டர் தயாரிப்பு பணிகளும், வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு காலண்டர் விற்பனை ரூ.400 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு விலையேற்றம் இல்லை. ஆனால், அரசியல் கட்சிகளின் ஆர்டர்கள் போதிய அளவு இல்லை. 2026ம் ஆண்டுக்கான காலண்டர் தயாரிக்கும் பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று, தமிழ் பஞ்சாங்கம் வெளியானவுடன் துவங்கும்’ என்றனர்.
‘க்யூஆர் கோடு’

2025ம் ஆண்டு தினசரி காலண்டரில் புதிய அம்சமாக ஒவ்வொரு நாள் தாளிலும் ஒரு ‘க்யூஆர் கோடு’ அச்சிடப்பட்டுள்ளது. இதை ஸ்கேன் செய்து பார்த்தால், அதில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் உள்ள முக்கிய இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா இடங்கள், முக்கிய தொழில்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொகுதி என, தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளின் முக்கியமான விவரங்கள், இந்த ‘க்யூஆர்’ கோர்டு மூலம் தெரிந்து கொள்ளும் வகையில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த தினசரி காலண்டருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மேலும், சிவகாசியில் தயார் செய்யும் காலண்டர்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா மற்றும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

விலை எவ்வளவு?
கார்களில் வைக்கப்படும் சிறிய காலண்டர் முதல் வீடுகள், நிறுவனங்களில் தொங்கவிடப்படும் பெரிய காலண்டர்கள் வரை சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சுவாமி படங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர்கள், இயற்கைக் காட்சிகள், குழந்தைகள் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதேபோல, விதவிதமான வடிவங்களில் டைரிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தினசரி காலண்டர் ரூ.15 முதல் ரூ.2200 வரையிலும், மாதாந்திர காலண்டர்கள் ரூ.50 முதல் ரூ.500 வரையிலும் விற்பனைக்கு வந்துள்ளன.

The post புத்தாண்டை வரவேற்க புதிய அம்சங்கள்; சிவகாசியில் 2025ம் ஆண்டு காலண்டர் இறுதிக்கட்ட தயாரிப்பு பணி விறுவிறு: ‘கியூஆர் கோடு’ மூலம் எம்எல்ஏ தொகுதியை அறியலாம் appeared first on Dinakaran.

Read Entire Article