தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டம் சில தனித்துவமான பண்புகளைக் கொண்டிருக்கிறது. கேரளாவை ஒட்டி அமைந்திருப்பதால், கேரளாவின் மொழி, உணவு, நில அமைப்பு உள்ளிட்டவை குமரி மாவட்டத்தில் கலந்திருக்கும். அதேபோல விவசாயத்தொழிலும் கேரளாவைப்போலவே நடைபெறும். ரப்பர், வாழை, தென்னை என பல பயிர்களும் இங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் குமரி மாவட்ட தென்னைக்கென்று சில சிறப்புகள் இருக்கின்றன. இந்த மாவட்டத்தில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடந்து வருகிறது. தென்னையில் 2 மாதத்திற்கு ஒரு முறை மகசூல் கிடைத்து வருகிறது. குமரி மாவட்டத்தில் விளையும் தேங்காய்க்கு மற்ற மாவட்டங்களில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக ஈத்தாமொழி தேங்காய் என்றால் பெரியதாகவும், தேங்காய்க்குள் இருக்கும் பருப்பின் அடர்த்தி அதிகமாகவும் இருக்கும். குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் பல லோடு தேங்காய் வெளி மாவட்டங்களுக்கு செல்கிறது. இதனால் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக புத்தளம் பகுதியில் தென்னை நாற்றுப்பண்ணை அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பண்ணைக்கு சென்றிருந்தபோது, தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா நம்மை வரவேற்று, பண்ணை குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
*நாகர்கோவிலில் இருந்து மணக்குடி செல்லும் வழியில் புத்தளம் சாலை சந்திப்பில் இருந்து இடதுபுறமாக செல்லும் சாலையில் 1.5 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் இந்தப் பண்ணை 1966ம் ஆண்டு துவங்கப்பட்டது. வேளாண்மை துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த இப்பண்ணை கடந்த 2023ம் ஆண்டில் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறைக்கு ஒப்படைக்கப்பட்டது.
*நெட்டை, நெட்டை × குட்டை, குட்டை × நெட்டை ஆகிய மூன்று வகையான தென்னங்கன்றுகள் தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மானியத் திட்டங்கள் மூலமாகவும், நேரடி விற்பனை மூலமாகவும் வழங்கப்படுகிறது. நெட்டை தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்ய தேவைப்படும் நெற்றுகள் தரமான தாய் மரங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டு நடவு செய்யப்படுகிறது. நெட்டை ×குட்டை, குட்டை ×நெட்டை கன்றுகளை உற்பத்தி செய்வதற்கென்றே அகஸ்தீஸ்வரத்தில் பிரத்யேக தென்னை ஒட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இந்தத் தென்னை ஒட்டு மையத்தில் உற்பத்தி செய்யப்படும் நெட்டை × குட்டை, குட்டை × நெட்டை நெற்றுகள் மாநில தென்னை நாற்றுப் பண்ணை, புத்தளத்திற்கு கொண்டு வரப்பட்டு நடவு செய்யப்பட்டு நெட்டை × குட்டை, குட்டை × நெட்டை கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
*நெட்டை × குட்டை ரகமானது, மேற்கு கடற்கரை நெட்டை மற்றும் சௌகாட் ஆரஞ்சு குட்டை ஆகியவற்றை கலப்பு செய்து உருவாக்கப்படுகிறது. குட்டை ×நெட்டை சௌகாட் ரகமானது ஆரஞ்சு குட்டை மற்றும் மேற்கு கடற்கரை நெட்டை ஆகியவற்றைக் கலப்பு செய்து உருவாக்கப்படு கிறது. நெட்டை கன்றுகள் 80-90 ஆண்டுகள் வரை மகசூல் கொடுக்கும். தேங்காய் மற்றும் கொப்பரை பயன்பாட்டிற்கு மிகவும் உகந்தது. 7 முதல் 8 ஆண்டுகளில் காய்க்க ஆரம்பிக்கும். சராசரியாக 80 காய்கள் காய்க்கும். வறட்சியைத் தாங்கி வளரும்.
* நெட்டை × குட்டை ஒட்டு ரகங்கள் விரைவில் பூ பூக்கும் தன்மை கொண்டவை. 4 வருடங்களில் காய்க்க ஆரம்பிக்கும். 100-120 காய்கள் வரை காய்க்கும். அதிக மகசூல், தரமான கொப்பரைகள் மற்றும் அதிக எண்ணெயை கொடுக்கக் கூடிய இந்த ரகம் இளநீர் பயன்பாட்டிற்கும் உகந்தது.
குட்டை × நெட்டை 3, 4 வருடங்களில் காய்க்கும். இளநீர் பயன்பாட்டிற்கு மிகவும் உகந்தது. குறைவான உயரம் மட்டுமே வளர்வதால் அறுவடைக்கு எளிதானது. 2023 – 2024ம் ஆண்டில் 39,922 தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு திட்டங்கள் மற்றும் நேரடி விற்பனை மூலம் வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் ரூ.37,83,645 வருவாய் பெறப்பட்டுள்ளது.
* 2024-25ம் ஆண்டில் கடந்த 1.04.2024 முதல் 33182 தென்னங்கன்றுகள் மறுநடவாக்கம் மற்றும் புதுப்பித்தல், தென்னை வேர்வாடல் நோய் மேலாண்மை, தென்னை பரப்பு விரிவாக்கம் ஆகிய மூன்று திட்டங்கள் மூலம் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. நேரடி விற்பனை மூலம் 27549 தென்னங்கன்றுகள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
*திட்டங்கள் மூலம் மானியத்தில் தென்னங்கன்றுகள் மற்றும் இடுபொருட்கள் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் நிலம் அமைந்துள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை அணுகி பயன்பெறலாம். நேரடியாக தென்னங்கன்றுகள் வாங்க 63743 84358, 88259 92563, 83004 67308 அலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
தொடர்புக்கு: ஷீலா ஜான்
மாவட்டதோட்டக்கலை
துணை இயக்குநர்.
99942 23496.
The post புத்தளம் தென்னை நாற்றுப்பண்ணை! appeared first on Dinakaran.