
சென்னை,
சேலம் பெரியேரி தலைவெட்டி முனியப்பன் திருக்கோவில் ஒரு புத்த மத வழிபாட்டு தலம் என்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்புக்கு சென்னை ஐகோர்ட்டின் இருநீதிபதிகள் பெஞ்ச் நேற்று தடை விதித்து உத்தரவிட்டது.
முன்னதாக சேலம் அரசு மருத்துவமனைக்கு எதிரே பெரியேரி கிராமம், கோட்டை சாலையில் அமைந்திருக்கும் தலைவெட்டி முனியப்பன் திருக்கோவில் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ''தலைவெட்டி முனியப்பன் திருக்கோவில் அல்ல. அது புத்தர் கோவில். இதில் இந்து சமய அறநிலையத்துறைக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை'' என்று தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர், கமிஷனர் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அறநிலையத்துறை சார்பில், ''கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேலாக தலைவெட்டி முனியப்பன் என்றே வழிபாடு நடைபெறுகிறது. பூஜைகளும் செய்யப்பட்டு வருகிறது. 1991-ம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டு தலங்கள் சட்டப்படி 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி அன்றைய தினத்தில் வழிபாட்டு தலமாக இருக்கும் எந்த ஒரு கோவிலையும் மாற்றம் செய்ய இயலாது. அதனால், ரிட் வழக்கில் தலைவெட்டி முனியப்பன் கோவிலை புத்தர் கோவில் என்று உத்தரவு பிறப்பிக்க இயலாது'' என்று வாதிடப்பட்டது.
இதனை ஏற்று நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கினை ஏற்றுக்கொண்டு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.