புதையலுக்காக குழந்தையை பலி கொடுக்க திட்டமிட்ட தந்தை - பெங்களூருவில் பரபரப்பு

2 months ago 13

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்த சதாம் என்ற நபர், 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். சதாம் தனது மத அடையாளத்தை மறைத்து, தன்னை ஒரு இந்து என்று கூறி அந்த பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மனைவியின் பிரசவத்தின்போது மருத்துவமனையில் ஆதார் அட்டையை கேட்டபோதுதான் அவரது உண்மையான பெயர் சதாம் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் காதல் கணவர் என்பதால், அந்த பெண் இதனை ஏற்றுக்கொண்டார். ஆனால் அதன் பிறகு சதாம் மாந்திரீகம் உள்ளிட்ட விவகாரங்களில் அதீத ஈடுபாடு கொண்டவராக மாறியுள்ளார். வீட்டில் நள்ளிரவு நேரங்களில் பூஜைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதன் உச்சகட்டமாக தனது குழந்தையை சாத்தானுக்கு பலி கொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் தங்களுக்கு புதையல் கிடைக்கும் என்றும் சதாம் கூறியுள்ளார். இதனால் பயந்துபோன சதாமின் மனைவி, துமகுருவில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கும் சென்று குழந்தையை தன்னிடம் கொடுக்குமாறு சதாம் தகராறு செய்துள்ளார்.

இது தொடர்பாக சதாமின் மனைவி கே.ஆர்.புரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்க முயன்றபோது போலீசார் அந்த புகாரை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த பெண் நேரடியாக பெங்களூரு காவல் ஆணையர் தயானந்திடம் தனது கணவர் குறித்து புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்ட காவல் ஆணையர் தயானந்த், பெண்ணின் புகார் மீது நடவடிக்கை எடுக்க மறுத்த கே.ஆர்.புரம் காவல்நிலைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.     

Read Entire Article