புதையலில் கிடைத்ததாக கூறி போலி தங்க நாணயம் விற்று மோசடி அதிமுக நிர்வாகி உட்பட 6 பேர் கைது

3 months ago 19

செங்கம்: போலி தங்க நாணயங்கள் விற்று மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(43), லாரி உரிமையாளர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் போலீசில் அளித்த புகாரில் கூறியிருந்ததாவது:
விழுப்புரம் மாவட்டம் பெரிய அமனம் கிளை அதிமுக செயலாளர் தர்மலிங்கம் மற்றும் அவரது நண்பர்கள் என 8 பேர் எனது லாரியில் வந்தபோது பழக்கமாயினர். எனது லாரியை ₹4 லட்சத்துக்கு விற்றேன். அந்த பணத்தில் வியாபாரம் செய்ய நினைத்து தர்மலிங்கம் தரப்பினரிடம் யோசனை கேட்டபோது, விவசாய கிணறு தோண்டும்போது 140 தங்க நாணயம் கிடைத்ததாகவும், அதன் மதிப்பு ₹30 லட்சம், ₹4 லட்சம் கொடுத்தால் தருவதாகவும் கூறினர். அதை நம்பி ₹4 லட்சத்தை கொடுத்து வாங்கினேன். ஆனால் அந்த நாணயங்கள் போலி என பிறகுதான் தெரியவந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அவர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் செங்கம் போலீசார் வழக்கு பதிந்து கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படையினர் வேட்டவலம் பைபாஸ் சாலையில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அதிமுக செயலாளர் தர்மலிங்கம் (67), சத்யராஜ்(24), அருள்முருகன்(45), வெங்கடேசன்(24), சுரேஷ்(48), நாகவள்ளி(39) ஆகியோர் பிடிபட்டனர். விசாரணையில், இவர்கள் லாரி உரிமையாளர் சீனிவாசனிடம் போலி தங்க நாணயங்களை கொடுத்து ஏமாற்றியதுபோல் பலரிடம் மோசடி செய்துள்ளதும், சென்னையை சேர்ந்த 2 பேரை ஏமாற்றி போலி தங்க நாணயங்களை விற்க கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து கார் மற்றும் போலி தங்க நாணயங்களை பறிமுதல் செய்தனர்.

The post புதையலில் கிடைத்ததாக கூறி போலி தங்க நாணயம் விற்று மோசடி அதிமுக நிர்வாகி உட்பட 6 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article