‘‘தாமரை கட்சியில் என்ன சலசலப்பு..’’ என கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகரத்தின் தாமரைக்கட்சியில் மாவட்ட தலைமைக்கே தெரியாமல் ஆளாளுக்கு நிர்வாகியாக செயல்படத் தொடங்கி இருக்கிறார்கள். கட்சியில் தலா 50 பேரை உறுப்பினராக இணைத்து, இதற்கென நிரப்பிய ஆக்டிவ் பாரத்தை அனுப்பி வைத்திட மாவட்ட தலைமைக்கு மாநிலத்தலைமையிடம் இருந்து உத்தரவாம். இதில் சிலர் அலைந்து திரிந்து ஆட்கள் பிடித்து 50 பெயர்களை எழுதிச் சேர்த்து ஆக்டிவ் பாரத்தை நிரப்பிக் கொண்டு வந்து, மாவட்ட தலைமையிடம் தந்தனர்.
ஆனால், வெகு விரைவில் தனக்கு பதவிக்காலம் முடிய இருப்பதால், அடுத்த முறை தன்னை உயர் பதவிக்கென தேர்ந்தெடுப்பதற்கு ஆதரவு ஆட்களைச் சேர்க்கும் விதமாக, கஷ்டப்பட்டு கெஞ்சிக் கதறி ஆட்கள் பிடித்து உறுப்பினர்களென பெயர் நிரப்பி கட்சியினர் தந்த ஆக்டிவ் பாரத்தில் தனக்கு ஆதரவற்றவர்கள் அத்தனை பேரையும் நீக்கிவிட்டு, ஆதரவாளர்களின் பெயர்களை மட்டுமே கொண்டு புதிய ஆக்டிவ் பாரம் தயாரித்து தூங்கா நகரத்து கட்சியின் மாவட்டத்தலைமை, மாநிலத்தலைமைக்கு அனுப்பி வைத்ததாம்.
இதனையறிந்து வெகுண்டெழுந்த கட்சியினர், கோபாவேசத்தில் தாங்கள் சேகரித்த பட்டியலை திரும்ப, மாநிலத்தலைமைக்கே நேரடியாக அனுப்பி வைத்துள்ளனராம். அத்தோடு இத்தகவல் அறிந்த மற்றவர்களும் மாவட்ட தலைமையிடம் பட்டியல் தராமல், மாநிலத்தலைமைக்கே அனுப்பி வருகின்றனராம். யார் யாரையோ காலைக் கையைப் புடிச்சு, காசெல்லாம் கரைச்சு, கட்சியில் சேர்க்கிறதே குதிரைக் கொம்பா இருக்கு. இதுல கிடைச்ச கொஞ்சப் பேரையும் பில்டர் பண்ணி அனுப்பி வைச்சா எப்படிங்க..
அதான், நாங்கதான் எங்களுக்கு நிர்வாகின்னு நேராவே மாநிலத்தோடு டீல் வச்சுகிறோம் என்று தாமரைக் கட்சியினர் ஆவேசக் குரல் எழுப்புகின்றனர் என்றார் விக்கியானந்தா. ‘‘ஒப்பந்தக்காரர் வேலையை முடிக்காம, பணத்தை பாய்ச்சி வாயை அடைக்கிறதா புகார் வருதே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல பள்ளி கொண்ட பேரூர் ஆட்சி இருக்குது. இதில் உள்ள 18 வார்டு பொது மக்களுக்கு பாலாற்று தண்ணீரை குடிநீரா வழங்க அம்ருத் 2.0 திட்டத்தை கடந்த 1 வருஷத்துக்கு முன்னாடி பணிகள் ஆரம்பிச்சாங்க.
பணிகள் எடுத்த ஒப்பந்தமானவரு சரிவர வொர்க் நடக்காம ஏகத்துக்கும் அதில் பல சிக்கல் ஏற்படுத்தி விட்டாராம். இருந்தும் ஒப்பந்தமானவரு எதுக்கும் அசரலையாம். என்னன்னு விசாரிச்சுதுல இந்த பணி திட்டத்துக்கு பணத்த ஒதுக்கும் அதிகாரிகளுக்கு ‘ப’ விட்டமின்கள் தாராளமா பாய்ந்திருக்காம்… இதில் கிரேடு வாரியா உயரதிகாரி முதல் கீழ் மட்டம் வரை பலவிதமா ரேட் பிக்ஸ் பன்னி முறைகேடு நடத்தி உள்ளாராம்.
அதனையும் மீறி மாவட்ட ஆட்சியானவரு, சில தினங்களுக்கு முன்பு ஆய்வுக்கு வந்தப்ப கிட்ட இருக்கற திட்ட பணிகளை காட்டிவிட்டு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆய்வுக்கு அழைத்து சென்று சாமார்த்தியமாய் பேசி அனுப்பி வைச்சுவிட்டாராம். வாங்கன விட்டமினுக்கு எப்படி எல்லாம் வேலை செய்ய வேண்டியிருக்கு என நேர்மையான அதிகாரிகளின் புலம்பல் சத்தம் ஒலிக்க தொடங்கியுள்ளதாம். அதனால பொறுப்பான மாவட்ட நிர்வாக உயரதிகாரி இந்த விஷயத்துல தகுந்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை குரல் வலுத்து வருகிறதாம்’’ என்றார் விக்கியானந்தா…
‘‘கள ஆய்வு கூட்டத்தில் வைத்தியானவர் குறித்து வாய் திறப்பதில்லையாமே..’’ என சந்தேகத்தோடு கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சி கள ஆய்வு கூட்டத்தில் சின்னமம்மி, தேனிக்காரர், குக்கர் கட்சியின் தலைமை ஆகியோர் குறித்தும், அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் மாஜி அமைச்சர்கள் கடுமையாக தாக்கி பேசி வருகிறார்கள்… ஆனால், தேனிக்காரர் அணியில் உள்ள நெற்களஞ்சியம் மாவட்டத்தை சேர்ந்த வைத்தியானவர் குறித்து, மாஜி அமைச்சர்கள் வாய் திறக்காமல் உள்ளார்களாம்…
இது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வைத்தியானவருக்கு எதிராக, பேசக்கூடாது என தலைமை உத்தரவிட்டுள்ளதா என கட்சிக்குள்ளே நிர்வாகிகளே பேசிக் கொள்கிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘புதுவையில் தாமரை தள்ளாட்டத்தில் இருக்குதாமே’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் மார்ட்டின் மகன் அரசியல் வருகை, புதுச்சேரி அரசியல் கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம். மலர் கட்சியோட சின்னத்தில் நின்றால் வரும் சட்டமன்ற எலெக்ஷன்ல போணியாகமாட்டோம்னு பாஜவில இருக்கிற 6 எம்எல்ஏக்களும் மார்டின் மகன் தலைமையில் தனி அணியாக செயல்பட ஆரம்பிச்சிருக்காங்களாம்.
கேட்டால் நாங்கள் பாஜவில்தானே இருக்கிறோம் எனக்கூறி தற்போதையை நிலைமையை சமாளிக்கிறாங்க. புல்லட்சாமி மீதும், தேஜ தலைமை மீதும் கடும் அதிருப்தியில இருக்கும் இந்த எம்எல்ஏக்கள் வரும் தேர்தல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்துடனே இருப்பதாக உளவுத்துறை புல்லட் சாமியிடம் போட்டுக்கொடுத்துள்ளதாம். அதோட, எத்தனை காலம்தான் பழைய அம்பாசிடர் வண்டியை பெயிண்ட் அடித்து ஓட்டுவதுன்னு மறைமுகமாக சாமியை அந்த எம்எல்ஏக்கள் திட்டியதையும் கூறியுள்ளனர்.
ஆனால் இதற்கு எந்த ரியாக்ஷனும் காட்டவில்லையாம். அவங்க எங்கே போவார்கள், எங்கும் செல்ல முடியாது. வேறு ரூபத்தில் நம்மிடம்தான் திரும்ப வருவார்கள் என கூலாக இருக்கிறாராம். அதோடு தேர்தலில் பாஜவை கழற்றிவிட்டு, நடிகர் கட்சியுடன் கூட்டணிக்கு புல்லட்சாமி திட்டமிட்டிருக்கிறாராம். இதனை புதுச்சேரியை சேர்ந்தவரும், நடிகர் கட்சியின் செயலருமானவரின் வழியாக தகவல் அனுப்பியுள்ளார். இதற்கு ஓகேன்னு பதில் வந்திருக்குதாம். மொத்தத்தில எல்லா கட்சியில இருந்தும் எம்எல்ஏக்களை உருவி புதுச்சேரியில ஆட்சிக்கு வரத்துடித்த மலர் கட்சிய வரும் தேர்தலில் எல்லோரும் சேர்ந்து தனியாக கழற்றிவிட இருக்கிறாங்களாம் என்கிறார் விக்கியானந்தா.
The post புதுவையில் தாமரை பார்ட்டிய தனியா கழற்றிவிட தயாராகிக் கொண்டிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.