புதுவையில் 5 பேரிடம் ₹14.95 லட்சம் மோசடி

1 day ago 2

புதுச்சேரி, ஜன. 30: புதுவையில் 5 பேரிடம் ₹14.95 லட்சத்தை மோசடி செய்த மர்ம கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி திருமுடி நகரை சேர்ந்தவர் லோகேஷ் ராஜ். பேட்டரி கடை நடத்தி வருகிறார். இவரை மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விவசாய ட்ரோன்களுக்கு பேட்டரி தேவைப்படுவதாகவும், தனக்கு பொருள் வந்தவுடன் பணம் தருவதாக கூறியதாக தெரிகிறது. இதனைநம்பி லோகேஷ்ராஜ், மர்ம நபருக்கு ₹13.91 லட்சம் மதிப்புள்ள பேட்டரிகளை அனுப்பியுள்ளார். மர்ம நபர் பேட்டரியை பெற்றவுடன், லோகேசுடன் இருந்து தொடர்பை துண்டித்து விட்டார். அதன்பிறகே தான் மோசடி கும்பலிடம் ஏமாந்தது லோகேசுக்கு தெரியவந்தது.

மேலும் முத்தியால்பேட்டையை சேர்ந்த சுவாதி என்பவர் தனது செல்போனில் லோன் ஆப் பார்த்துள்ளார். சிறிது நேரத்தில் சுவாதியின் வங்கி கணக்கு பணம் வந்துள்ளது. இதையடுத்து மர்ம நபர் ஒருவர் சுவாதியை தொடர்புகொண்டு பணத்தை திருப்பி அனுப்புமாறு கூறியுள்ளார். இதையடுத்து சுவாதியும், பணத்தை திருப்பி அனுப்பியுள்ளார். அதன்பிறகே மர்ம நபர் மீண்டும், சுவாதியை தொடர்புகொண்டு மீண்டும் பணம் அனுப்புமாறு, அவரது புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டியுள்ளார். இதில் பயந்துபோன சுவாதி மர்ம நபருக்கு ₹42 ஆயிரம் அனுப்பியுள்ளார்.

இதேபோல் புதுநகரை சேர்ந்த வெங்கடேசன் பெருமாள் என்பவர் ₹20 ஆயிரம், வில்லியனூரை சேர்ந்த பூவரசன் ₹19 ஆயிரம் மற்றும் உருளையன்பேட்டை சேர்ந்த ராகுல் ₹23 ஆயிரத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். மேற்கூறிய நபர்கள் மொத்தமாக ₹14.95 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுவையில் 5 பேரிடம் ₹14.95 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Read Entire Article