புதுப்பெண் தற்கொலை விவகாரம்: விஷம் குடித்த மாமியார் உயிரிழப்பு

2 months ago 14

குமரி,

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெற்குமண் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பாபு என்பவரது மகள் சுருதி பாபு என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.

திருமணத்திற்கு பிறகு சுருதி பாபு கணவர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் சுருதிபாபு கடந்த 21-ம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுதொடர்பாக கணவர் கார்த்திக், மாமியார் செண்பகவல்லி மற்றும் சுருதி பாபுவின் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் தனது மாமியாரின் கொடுமையால் தான் நான் தற்கொலை செய்துகொண்டேன் என சுருதி பாபு (புதுப்பெண்) வாட்ஸ்-அப்பில் ஆடியோ ஒன்றை தனது தாயாருக்கு அனுப்பியுள்ளார். அந்த ஆடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது.

இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி வீட்டில் இருந்த செண்பகவல்லி கைதுக்கு பயந்து திடீரென விஷத்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவரது மகன் கார்த்திக் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் செண்பகவல்லியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாமியார் செண்பகவல்லி சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். தொடர்ந்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சோக சுவடு மறைவதற்குள் அவரது இறப்புக்கு காரணமாக குற்றம்சாட்டப்பட்ட மாமியாரும் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read Entire Article