புதுச்சேரி: புதுவையில் மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் நியமன விவகாரத்தில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி இடையே மோதல் வெடித்துள்ளது. இதனால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ள ரங்கசாமியை பாஜவினர் சமாதானம் செய்து வருகின்றனர். இதற்கிடையே கவர்னர்- முதல்வர் அதிகார மோதலால் மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ நேரு நேற்று திடீரென சட்டசபை படிக்கட்டில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து நேரு எம்எல்ஏ கூறுகையில், புதுச்சேரியில் மக்கள் அளித்த வாக்குகளுக்கு உரிய மரியாதை இல்லை. தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு உரிய மரியாதை இல்லை. 3 நியமன எம்எல்ஏக்களை ஒன்றிய அரசே நியமிக்கிறது. மாநில உரிமைக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தால் அவருக்கு, பின் முதல் நபராக நானும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன். அதிகார போட்டியில் சட்டமன்றம் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரே தீர்வு சட்டமன்றத்தை முடக்கி விட்டு மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை தேர்தல் புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்றார்.
மதிய உணவருந்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நேரு எம்எல்ஏவிடம் துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேரில் சென்று சமாதானம் செய்தனர். இதையடுத்து போராட்டத்தை நேரு எம்எல்ஏ கைவிட்டார். அப்போது தனது ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகர் ராஜவேலுவிடம் நேரு வழங்கினார். தன்னைப்போல மற்ற எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய வேண்டுமெனவும் நேரு கோரிக்கை விடுத்தார். சமீபத்தில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பாஜ அமைச்சர் மற்றும் 3 பாஜ நியமன எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
The post புதுச்சேரியில் மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா appeared first on Dinakaran.