புதுச்சேரி, பிப். 11: புதுச்சேரியில் பிச்சைக்காரன் வேடமிட்டு மதுக்கடையில் பணம் திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ₹1.31 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள தனியார் மதுபான கடையில் கடந்த 4ம் தேதி இரவு ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். மறுநாள் கடையை திறக்க கடையின் கணக்காளர் லட்சுமணன் வந்தபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் லட்சுமணன் கடையின் உள்ளே சென்று கல்லா பெட்டியில் பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டு இருந்த ₹75 ஆயிரம் பணம் மற்றும் கடையில் இருந்த பணம் பையும் மர்ம நபர் திருடி சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இச்சம்பவம் குறித்து லட்சுமணன் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
சீனியர் எஸ்பி (பொ) பிரவீன்குமார் திரிபாதி தலைமையில், கிழக்கு எஸ்.பி. ரகுநாயகம் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஒதியஞ்சாலை குற்றப்பிரிவு போலீசார் மற்றும் கிழக்கு குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த கடையின் அருகே உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கடையின் அருகே பிச்சைக்காரர் ஒருவர் செல்வது பதிவாகி உள்ளது. இதையடுத்து போலீசார் அவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது அந்த நபர் வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வம்பாகீரப்பாளையம் பகுதியில் விசாரணை நடத்தியபோது, தஞ்சாவூர் நடு காவேரி பகுதியை சேர்ந்த மனோகர் (62) என்பதும் அவர் தஞ்சாவூரில் பதுங்கி இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபு, சந்திரசேகரன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் தஞ்சாவூருக்கு சென்று மனோகரை நேற்று முன்தினம் கைது செய்து புதுவைக்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீசார் மனோகரிடம் விசாரணை நடத்தியதில், தஞ்சாவூரில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதால், புதுவை வம்பாகீரப்பாளையத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிக்கு வந்துள்ளார். பின்னர் காலை முழுவதும் வீட்டை விட்டு வெளியே வராமல், இரவில் பிச்சைக்காரன் போல் வேடமிட்டு ஒயிட் டவுன் பகுதியில் நோட்டமிட்டு, பாரதி வீதியில் உள்ள தனியார் மதுபான கடையில் இருந்த பணத்தை கொள்ளையடித்தாக ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்த ₹1.31 லட்சம் பணம், வெள்ளி பிரெஸ்லெட்டை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் மனோகர் மீது ஏற்கனவே பெரியகடை, முத்தியால்பேட்டை மற்றும் காலாப்பட்டில் திருட்டு வழக்குகளில் சிறைக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post புதுச்சேரியில் பரபரப்பு பிச்சைக்காரன் வேடமிட்டு மதுக்கடையில் பணத்தை திருடிய ஆசாமி கைது: ₹1.31 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.