புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் ஊசுடு தொகுதிக்குட்பட்ட தொண்டமாநத்தம் கிராமத்தில் ரூ.2.55 கோடி மதிப்பில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் புதிதாக கட்டப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட இந்த குடிநீர்த் திட்டத்தின் தொடக்க விழா தொண்டமாநத்தம் கிராமத்தில் இன்று நடைபெற்றது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார் ஆகியோர் புதிய மேல்நிலைத் தொட்டியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து நீர் ஏற்று மோட்டாரை இயக்கி வைத்து நீர்த்தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தனர். நீரேற்று மைய வளாகத்தில் பசுமை சூழலை ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றினை துணைநிலை ஆளுநர் நட்டார். பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.