புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த 756 மதுபாட்டில்கள் காருடன் பறிமுதல்

2 hours ago 2

ஆறுமுகநேரி : புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த 756 மதுபாட்டில்களை காருடன் ஆத்தூர் போலீசார் பறிமுதல் செய்தனர். ஆத்தூர் அருகே உள்ள சேர்ந்தபூமங்கலத்தில், சந்தேகப்படும்படி கார் நிற்பதாக ஆத்தூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று காரை சோதனையிட்டனர். அதில் 756 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் குரும்பூர் சோழியக்குறிச்சியைச் சேர்ந்த தங்கப்பாண்டி மகன் முருகன் என்பவர், புன்னக்காயலை சேர்ந்த ஒருவருக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆத்தூர் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான தனிப்படை போலீசார், முருகனை கைது செய்தனர். மேலும் காருடன் மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

வாகன சோதனை வீண்?

ஆத்தூர், ஆறுமுகநேரி பகுதியில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இப்பகுதியை கடந்து காரில் மதுபாட்டில்கள் கடத்திக் கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

ஏற்கனவே ஆத்தூர், ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் நடமாட்டம் உள்ளதாகவும், இதுதொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டாலும், போதைப்பொருட்கள் நடமாட்டம் குறையவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி போதைப்பொருட்கள் கடத்தலை முழுமையாக தடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த 756 மதுபாட்டில்கள் காருடன் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article