புதுச்சேரியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு ரேஷன் கடைகள் திறப்பு

3 months ago 16

புதுச்சேரி,

புதுச்சேரியில் சிவப்பு ரேசன் கார்டுகளுக்கு 20 கிலோ அரிசியும், மஞ்சள் ரேசன்கார்டுக்கு 10 கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் மந்திரி நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது இலவச அரிசி வழங்குவதில் ஆளும் அரசுக்கும். அப்போதைய கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதில் உள்துறை அமைச்சகம் தலையிட்டு இலவச அரிசிக்கு பதிலாக நேரடி பணப்பரிமாற்ற திட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி கிலோ அரிசிக்கு ரூ.30 என நிர்ணயம் செய்யப்பட்டு, சிவப்பு நிற அட்டைக்கு 20 கிலோவுக்கு ரூ.600, மஞ்சள் நிற அட்டைக்கு 10 கிலோ அரிசிக்கு ரூ.300 வழங்கப்பட்டு வந்தது.

வெளி மார்க்கெட்டில் அரிசியின் விலை அதிகரித்து வருவதால், அரசு வழங்கும் மானிய உதவி போதவில்லை என பணத்துக்கு பதிலாக மீண்டும் ரேசன் அரிசி வழங்க வேண்டும் என புதுவை மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சிக்கு வந்தும், ரேசன் கடைகள் திறக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று 3 ஆண்டுகளாகியும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி அரசு ரேசன் கடையை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட்டு மாதம் பட்ஜெட் கூட்டத்தில் விரைவில் ரேசன் கடைகள் திறக்கப்படும்' என்று முதல் மந்திரி ரங்கசாமி அறிவித்தார். தொடர்ந்து ரேசன்கடை திறக்க கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் வழங்கினார்.

முதல் கட்டமாக தீபாவளி பரிசாக அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் 10 கிலோ இலவச அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை இன்று முதல் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கபட்டது.

இதன்படி இன்று மாலை ரேசன் கடை திறப்பு மற்றும் தீபாவளி இலவச பொருட்கள் வழங்கும் விழா மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை சாலையில் நடைபெற்றது. கவர்னர் கைலாஷ்நாதன், முதல் மந்திரி ரங்கசாமி ஆகியோர் ரேசன் கடையை திறந்து வைத்து, இலவச அரிசி, சர்க்கரையை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தனர். 

Read Entire Article