புதுச்சேரி பாஜ பிரமுகர் சரமாரி வெட்டிக்கொலை: 8 பேர் கைது

7 hours ago 2

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜ பிரமுகரை வெட்டிக்கொன்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளைதோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (எ) காசிலிங்கம். இவரது மகன் உமாசங்கர் (36). பாஜ பிரமுகரான இவர் பிரபல லாட்டரி அதிபர் சார்லஸ் மார்ட்டின் பிறந்தநாள் விழாவை நேற்று கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள மண்டபத்தில் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தார். விழா ஏற்பாடுகளை பார்வையிட நேற்று முன்தினம் இரவு அந்த மண்டபத்துக்கு உமாசங்கர் சென்றார். மண்டபத்துக்கு வெளியில் அவர் நின்றிருந்தபோது, அங்கு 4 பைக்கில் வந்த மர்ம கும்பல் உமாசங்கரை அரிவாளால் சரமாரி வெட்டி படுகொலை செய்தது. அவருடன் இருந்த அருள் என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து அந்த கும்பல் தப்பியோடிவிட்டது.

தகவலறிந்த சீனியர் எஸ்பி கலைவாணன், எஸ்பிக்கள் வம்சித ரெட்டி, ஜிந்தா கோதண்டராமன், வீரவல்லபன், லாஸ்பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். உமாசங்கர் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுசம்பந்தமாக காசிலிங்கம் அளித்த புகாரின்படி லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். எஸ்பிக்கள் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு கொலைக்கான காரணங்கள், குற்றவாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், சாமிப்பிள்ளைத்தோட்டத்தில் உமாசங்கர் மற்றும் கர்ணா ஆகியோர் நண்பர்களாக இருந்துள்ளனர். பிறகு இவர்களுக்குள் கோஷ்டி பிரச்னை மற்றும் இடம் சம்பந்தமான பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். அதிலிருந்து இவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டு இருந்து வந்தது. இதற்கிடையே சித்தானந்தா கோயில் பின்புறம் உள்ள குயில்தோப்பு இடப்பிரச்னையால் இவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதனால் கர்ணா தூண்டுதலின்பேரில் 8 பேர் கொண்ட கும்பல் உமாசங்கரை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, சிறப்பு அதிரடிப்படை போலீசார் கர்ணா உள்ளிட்ட 8 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே உமாசங்கர் உடல் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது இறுதி ஊர்வலம் இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள பார் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாஜ அமைச்சருக்கு தொடர்பா?
புதுச்சேரி பாஜ பிரமுகர் உமாசங்கர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பாஜ அமைச்சர் சாய் சரவணக்குமாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாக உமாசங்கரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், அமைச்சர் சாய் சரவணகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், எனக்கும் உமாசங்கர் கொலைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். குயில்தோப்பு நில விவகாரத்தில் எனது தங்கை சட்டப்படி நிலத்தை வாங்கியதாகவும், அது தமக்கு சொந்தம் என உமாசங்கர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் கூறியதின் அடிப்படையில் இதுகுறித்து உண்மை நிலையை ஆராய மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் கொடுத்தேன் அவ்வளவுதான்.‌ அதற்கும் மாவட்ட ஆட்சியர் மூலம் தீர்வு கிடைத்துவிட்டது. இத்தகைய சூழலில் உமாசங்கர் கொலையில் என்னை தொடர்புபடுத்தி தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதோடு, இதுகுறித்து துணைநிலை ஆளுநர், முதல்வர் மற்றும் டிஜிபியிடம் புகார் அளிக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

உமாசங்கர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள்
பாஜ பிரமுகர் உமாசங்கர் மீது பாலியல் தொழில், கொலை, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குள் நிலுவையில் உள்ளது. இவர் பெயர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளது. இதேபோன்று கர்ணா மீது தந்தை, மகன் என இருவரை கொலை செய்த இரட்டை கொலை வழக்கு உள்ளது. இவர்கள் இருவருக்கும் ஏரியாவில் யார் பெரிய ஆளு என்ற போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

The post புதுச்சேரி பாஜ பிரமுகர் சரமாரி வெட்டிக்கொலை: 8 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article