தவளக்குப்பம்: புதுச்சேரி தவளக்குப்பத்தில் 1ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை பொதுமக்கள் ஆவேசமடைந்து விரட்டி விரட்டி தாக்கினர். 7 மணி நேர சாலை மறியல் போராட்டத்திற்கு பிறகு போக்சோ பிரிவின் கீழ் ஆசிரியர் மீது போலீசார் வழக்குபதிந்து கைது செய்தனர். புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது சிறுமி பாலியல் சீண்டலுக்கு ஆளாகிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியிடம் விசாரித்தபோது, பள்ளியில் அறிவியல் ஆசிரியர் மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்தாக கூறினார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே சிறுமியின் பெற்றோர், தவளகுப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று மாலை பள்ளியை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது பள்ளியில் இருந்து வெளியே வந்த ஆசிரியர் மணிகண்டனை விரட்டி, விரட்டி சரமாரியாக தாக்கினர். உடனே போலீசார் விரைந்து வந்து, அந்த ஆசிரியரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், பள்ளியில் இருந்த கண்ணாடி, மேஜை, கணினி அறை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். இதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று மாலை புதுச்சேரி-கடலூர் சாலையான தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து கலெக்டர் குலோத்துங்கன் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவர்த்தை நடத்தினர். மாலை 5 மணிக்கு துவங்கிய மறியல் இரவு 11 மணி வரை நீடித்தது. சபாநாயகர் செல்வம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல கைவிடப்பட்டது. தொடர்ந்து நேற்று நள்ளிரவு ஆசிரியர் மணிகண்டன் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்குபதிந்து கைது செய்தனர்.
தொடர்ந்து சிறுமியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து, இன்று காலை மீண்டும் பேராட்டத்தில் இறங்க இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தவளகுப்பம் புதுவை-கடலூர் நான்குமுனை சந்திப்பு, தனியார் பள்ளி உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து தலைவர்களையும் ஒன்றிணைத்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
The post புதுச்சேரி தவளகுப்பத்தில் 1ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஆசிரியரை விரட்டி விரட்டி அடித்த மக்கள் appeared first on Dinakaran.