புதுக்கோட்டை, டிச.1: புதுக்கோட்டை மாவட்டம், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் ஆகியவை இணைந்து உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடத்தும், எச்.ஐ.விஎய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஆரோக்கிய நடைப்பயிற்சியை கலெக்டர் அருணா,
உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு துவக்கி வைத்து, விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது; தமிழக அரசு எச்.ஐ.வி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் முதல் நாள் ‘உலக எய்ட்ஸ் தினமாக” அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, 01.12.2024 இன்றையதினம் (நேற்று) உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுவதை தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறைகீழ் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவின்கீழ் ஆகியவை இணைந்து உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடத்தும், எச்.ஐ.விஎய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்திடும் வகையில் ஆரோக்கிய நடைபயிற்சி துவக்கி வைக்கப்பட்டது.
அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதியில், நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின்கீழ் 8 கி.மீ. தூரம் கொண்ட நடைபாதை தேர்ந்தெடுக்கப்பட்டு நடைபயிற்சி நடைபாதையானது, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் துவங்கி மாலையீடு சென்றடைந்து டி.வி.எஸ். கார்னர் வழியாக ரயில்வே நிலையம் வழியாக வந்து மீண்டும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் முடிவடைந்தது.
இதில் அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள், நடைபயிற்சி மேற்கொள்வோர் சங்க உறுப்பினர்கள், மருத்துவத் துறை சார்ந்த பணியாளர்கள், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்மூலம் பொதுமக்களுக்கு எச்.ஐ.வி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வும், தினசரி நடைபயிற்சி மேற்கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, நீரழிவு நோய், ரத்தக் கொதிப்பு மற்றும் இருதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கவும், தொற்றா நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும். மேலும், நடைபயிற்சியின் நன்மைகள் குறித்தும், தினமும் நடைபயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமாக தொற்றா நோய்களின் தாக்கம் இல்லாமல் வாழ்வது குறித்தும் பொதுமக்கள், இளம் வயதினர், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று ‘நடப்போம் நலம் பெறுவோம்” 8 கி.மீ. நடைபயிற்சி மாவட்ட சுகாதார துறை மற்றும் நகராட்சி துறை மூலம் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.
எனவே பொதுமக்கள், இளம்வயதினர், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் தினசரி நடைபயிற்சியை கடைபிடித்து நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட வேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக, உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் அருணா தலைமையில் மாணாக்கர்கள், அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழியான ‘எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்து முழுமையாக அறிந்திடுவேன். அறிந்ததை என் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் தெரிவித்திடுவேன். புதிய எச்.ஐ.வி எய்ட்ஸ் தொற்று இல்லாத குடும்பம் மற்றும் சமூகத்தை உருவாக்கிடுவேன்.
தன்னார்வமாக ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள முன்வருவேன். எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்றுள்ளோரை அரவணைப்பேன். அவர்களுக்கு சம உரிமை அளிப்பேன் என உளமார உறுதி அளிக்கிறேன்” என்ற உறுதிமொழியினை, கலெக்டர் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.கலைவாணி, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) பிரியா தேன்மொழி, மாவட்ட சுகாதார அலுவலர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர் மரு.ராம்கணேஷ் (புதுக்கோட்டை), மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
The post புதுக்கோட்டையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரோக்கிய நடை பயிற்சி appeared first on Dinakaran.