புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி: 23 பேர் காயம்

7 hours ago 2

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே முக்காணிப்பட்டியில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையடுத்து ஆலயத்தின் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டது. முன்னதாக வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை தாசில்தார் பரணி, வடவாளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அருள்சிறு- ஞானபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா ஜல்லிக்கட்டு உறுதி மொழியை வாசித்து கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனையாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 250 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்து காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி, விசில் அடித்து வீரர்களை உற்சாகப்படுத்தினர். சில காளைகள் வீரர்களிடம் சிக்காமல் பாய்ந்து சென்றது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 586 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

காளைகள் முட்டியதில் 23 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த 10 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் கட்டில், பீரோ, நாற்காலி, ஹாட் பாக்ஸ், மிக்சி, குக்கர், டைனிங் டேபிள் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசு பொருட்கள், ரொக்கம் வழங்கப்பட்டது. 28 காளைகளை அடக்கிய நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கே.டி.எம். கார்த்திக் என்பவருக்கும் மோட்டார் சைக்கிளும், வீரர்களின் பிடியில் சிக்காமல் நீண்ட நேரம் களமாடிய காளையின் உரிமையாளர் தேனி மாவட்டத்தை சேர்ந்த விரசநாயக்கனூர் ஆர்.எஸ்.பி. பார்த்தசாரதி என்பவருக்கு மொபட்டும் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகளை விழாகுழுவினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர். 

Read Entire Article