*மீன்கள் சிக்காததால் கிராம மக்கள் ஏமாற்றம்
விராலிமலை : புதுக்கோட்டை அருகே 2 ஆண்டுக்கு பிறகு குளவாய்பட்டி கருங்குளத்தில் நேற்று நடந்த மீன்பிடி திருவிழாவில் மீன்கள் சிக்காததால் கிராமமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த ராஜகிரி குளவாய்பட்டி கருங்குளத்தில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நேற்று நடந்தது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் லோடு ஆட்டோ, ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாலை முதலே திரண்டனர்.
காலை 7 மணிக்கு ஊர் முக்கியஸ்தர் வெள்ளை துண்டை அசைத்து மீன்பிடி திருவிழாவை துவக்கி வைத்தனர். குளக்கரையில காத்திருந்த பொதுமக்கள் வலை, கச்சா, கூடை, பரி உள்ளிட்ட மீன்பிடிக்கும் உபகரணங்களுடன் குளத்தில் இறங்கி ஆர்வத்துடன் மீன் பிடித்தனர். ஆனால் குளத்தில் குறைந்த அளவிலான மீன்களே இருந்ததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். பெரும்பாலான மக்களுக்கு மீன்களே சிக்கவில்லை.
2 ஆண்டுக்கு பிறகு நடைபெறும் விழா என்பதால் 2 கிலோ முதல் 4 கிலோ வரை எடை கொண்ட பல்வேறு வகையான நாட்டு மீன்கள் சிக்கும் என்று எண்ணியிருந்தனர். ஆனால் குளத்தில் மீன் சிக்காதது மக்களிடையே ஏமாற்றத்தை அளித்தது. ஒரு சிலருக்கு விரால், கெளுத்தி, கட்லா, கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கியது.
The post புதுக்கோட்டை அருகே 2 ஆண்டுக்கு பிறகு குளவாய்பட்டி கருங்குளத்தில் மீன்பிடி திருவிழா appeared first on Dinakaran.