திருச்சி: திருச்சி ரயில்வே ஜங்ஷன் மேம்பாலம் நேற்று நள்ளிரவு முதல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டு இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. சென்னை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம் வழித் தடங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் திண்டுக்கல் மற்றும் அதன் மார்க்கமாக செல்லும்போது மதுரை புறவழிச்சாலை வழியாக சென்று மணிகண்டம் வண்ணாங்கோவில் வழியாக செல்ல வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து சென்னை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மார்க்கமாக செல்லக்கூடிய கனரக வாகனங்கள் வண்ணாங்கோவில், மணிகண்டம், வழியாக மதுரை புறவழிச்சாலை சென்றடைந்து மதுரை சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டும்.
பஸ்கள் செல்லும் வழித்தடங்கள்: சென்னை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம் வழித்தடங்களில் இருந்து திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் (மாநகர பஸ்கள் நீங்கலாக) மாற்றுப்பாதையாக மன்னார்புரம், டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், முத்தரையர் சிலை, கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், வெஸ்ட்ரி ரவுண்டானா, மாவட்ட கலெக்டர் அலுவலகம், பெரிய மிளகுபாறை வழியாக சென்று வ.உ.சி சாலை வழியாக மத்திய பஸ் நிலையம் செல்ல வேண்டும்.
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, தஞ்சாவூர், சேலம் மார்க்கமாக செல்லக்கூடிய பஸ்கள் வழக்கமாக செல்லும் குரு ஹோட்டல் ஜங்ஷன், முத்தரையர் சிலை, தபால் நிலையம் சிக்னல், டிவிஎஸ் டோல்கேட் வழியாக செல்ல வேண்டும். திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் வ.உ.சி சாலை, பெரியமிளகு பாறை, கோரிமேடு வழியாக புதிய மேம்பாலம் கீழ் சென்று சர்வீஸ் ரோடு வழியாக செல்ல வேண்டும். திண்டுக்கல் மார்க்கத்தில் இருந்து வரக்கூடிய பஸ்கள் புதிய பாலம் ஏறாமல் கோரிமேடு, பெரியமிளகு பாறை, வ.உ.சி ரோடு வழியாக மத்திய பஸ் நிலையம் செல்ல வேண்டும்.
மதுரை மார்க்கத்தில் இருந்து வரக்கூடிய பஸ்கள் மன்னார்புரம், அரிஸ்டோ மேம்பாலம் வழியாக பாலத்திலுள்ள ரவுண்டான வந்து ஜங்ஷன் மார்க்கமாக செல்லும் பாதையில் இறங்கி ஜங்ஷன் மற்றும் மத்திய பஸ் நிலையம் செல்ல வேண்டும். திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லக்கூடிய பஸ்கள், மத்திய பஸ் நிலையத்தின் பின்புறமாக வெளியே வந்து வ.உ.சி சாலை, காமராஜ் சிலை ரவுண்டானா, அரிஸ்டோ மேம்பாலம், மன்னார்புரம் வழியாக செல்ல வேண்டும்.
எ.புதூர், கிராப்பட்டியில் இருந்து வரும் இலகுரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் ஒரு வழிப்பாதையாக புதிய மேம்பாலம் வழியாக பாலத்திலுள்ள ரவுண்டான வந்து ஜங்ஷன் மார்க்கமாக செல்லும் பாதையில் இறங்கி ஜங்ஷன் மற்றும் மத்திய பஸ் நிலையம் செல்ல வேண்டும் என்று கலெக்டர் பிரதீப்குமார் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். திருச்சி மத்திய பஸ் நிலையம் மற்றும் ஜங்ஷனில் இருந்து மன்னார்புரம், எ.புதூர் சொல்லும் இலகுரக வாகனங்கள் மத்திய பஸ் நிலையம் அருகில் காமராஜர் சிலை ரவுண்டான வழியாக புதிய மேம்பாலம் ஏறி ஒருவழிப்பாதையாக செல்ல வேண்டும். எ.புதூர் செல்வோர் மன்னார்புரம் சென்று வரவேண்டும். இப்போக்குவரத்து மாற்றம் நேற்று நள்ளிரவு (அக்.12ம் தேதி) 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது என திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தொிவித்துள்ளார்.
The post புதிய பாலம் கட்டும் பணி துவங்க உள்ளதால் ஜங்ஷன் மேம்பாலத்தில் போக்குவரத்து `கட்’: நள்ளிரவு முதல் மாற்று வழித்தடம் appeared first on Dinakaran.