சென்னை: அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி அறிவித்திருந்த பேரணிக்கு காவல் துறையினர் திடீரென அனுமதி மறுத்ததால் அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போலீசாருடன் வாக்குவாதம் செய்ததுடன் கொட்டும் மழையில் சாலையில் படுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதனால், எழும்பூரில் பரபரப்பு ஏற்பட்டது. அனுமதியை மீறி பேரணி நடத்த முயன்றதால் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டால் தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிட மக்களின் உரிமை பறிக்கப்படுவதைக் கண்டித்தும், அந்த இடஒதுக்கீட்டை மீட்டெடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை எழும்பூர் ராஜ ரத்தினம் ஸ்டேடியம் அருகில் நவம்பர் 7-ம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி விழிப்புணர்வு பேரணி நடைபெறும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார். இதற்காக காவல் துறை அனுமதியும் பெறப்பட்டது.