புதிய சிந்தனையுடன்… புதிய வாய்ப்புகளை உருவாக்குங்கள்!

3 months ago 26

நம்முடைய உறுதியான, நம்பிக்கையான சிந்தனைதான் செயலாக மலர்ந்து நம்மைப் பெருமைப்படுத்துகிறது. எனவே, எதைச் சிந்தித்தாலும் நுட்பமாகச் சிந்திக்கப் பழகிக்கொண்டால்தான் வாழ்வில் நாம் விரும்பும் முடிவுகளை ஒவ்வொரு முறையும் குறி தவறாமல் அம்பை எய்தி வீழ்த்தமுடியும்.

உங்கள் லட்சியங்களை கற்பனை சக்தியின் மூலம் எவ்வளவு வேண்டுமானாலும் சிந்தித்து மனதால் ஒரு உயர்ந்த வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளலாம். அதே நேரத்தில் அந்த உயர்வை அடைய அறிவைப் பயன்படுத்தி ஒவ்வொரு அடியாக முயற்சி செய்கிறீர்கள் என்றால், நீங்கள் உண்மையில் நுட்பமாக சிந்திக்கும் மனிதர்தான்.

கோல்ப் விளையாட்டு வீரர்களும், கேரம்போர்டில் விளையாடுபவர்களும் தங்கள் கற்பனையில் விளையாடிப்பார்த்து பிறகு நன்கு உறுதிசெய்து கொண்டு விளையாடி பந்தையும் காயையும் குழிக்குள் தள்ளிவிடுகின்றனர். ஒவ்வொரு முறையும் நுட்பமாகச் சிந்தித்து தான் இந்த இரு விளையாட்டு வீரர்களும் விளையாடுகிறார்கள்.நம்முடைய வாழ்க்கையிலும் மிகப்பெரிய லட்சியமாக இருந்தாலும் சரி, எதிரில் குறுக்கிடும் தடைகளாக இருந்தாலும் சரி,இந்த விளையாட்டு வீரர்களைப் போலத்தான் கற்பனையில் சிந்தித்து, விரும்பும் முடிவை அடைய அறிவின் வழியே முயற்சி செய்ய வேண்டும்.

கற்பனையில் நாம் விரும்பும் முடிவைக் காணும்போதே அதை அடைவதற்கான வழியை நுட்பமாகச் சிந்தித்தால் போதும். அப்போது தோன்றும் புதிய சிந்தனைகளும், புதிய வாய்ப்புகளும் கற்பனையில் நாம் விரும்பிய முழுமையான வெற்றியை நிஜத்தில் பெற்றுத் தரும். இந்த வழியில் முயன்று மிகப் பெரிய வெற்றி பெற்ற இளம் தொழில்முனைவோர் ஒருவரை உங்களுக்கு அறிமுகம் செய்யப்போகிறேன்.

அர்யாஹி அகர்வால் மும்பையைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி.இவர் இளம் வயதிலிருந்தே தொழில்முனைவோராக வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமிக்கவராக இருந்தார். இளம்பெண்கள் பயன்படுத்தும் வாசனைப் பொருட்கள் (பர்ஃப்யூம்) குறைந்த விலையில் தரமானதாக கடைகளில் கிடைப்பது இல்லை என்பதைத் தெரிந்து கொண்டார்.

மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், இயற்கை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் குறைந்த விலையில் இருந்தால் இளம் வயதினர் விரும்பி வாங்குவார்கள் என நினைத்தார். இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ‘‘தபார்” என்ற தொழில் முனைவோர் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். அங்கு சென்று தன்னுடைய யோசனையைப் பற்றித் தெரிவித்தார். அவருடைய சிந்தனையில் உருவானதுதான் அர்யாஹி அகர்வால் 14 வயதில் உருவாக்கிய பெல்லா என்ற வாசனை பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம்.

வால்ட் டிஸ்னி,வாரன் பஃபெட்,ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற தொழில்முனைவோர்களின் வாழ்க்கை வரலாற்றை எல்லாம் படித்து ஊக்கம் பெற்று சிறுவயதிலேயே தொழில்முனைவோராக வேண்டும் என்ற இலக்கு அகர்வாலின் மனதில் இளம் வயதிலேயே உதயமானது. அகர்வாலுக்கு குறிப்பாக ஃபேஷன் உலகில் தனது வித்தியாசமான யோசனைகள் மூலமாக புதுமைகளை மலரச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

இளம்வயதினர் பயன்படுத்தக்கூடிய வகையில் 100 சதவீதம் இயற்கை சார்ந்த வாசனைப் பொருட்களைச் சந்தைகளில் தேடினார் அகர்வால். ஆனால், அப்படி ஒன்றுமே கிடைக்கவில்ல, முழுமையான இயற்கை சார்ந்த வாசனைப் பொருட்கள் தயாரிப்பது சாத்தியமே இல்லை என்பதே துறைசார்ந்தவர்களின் கருத்தாக இருந்தது. ஆனால் அகர்வால் சுமார் ஆறுமாத கால ஆய்வுக்குப் பின்னர் சரியான ஒன்றைத் தயாரித்தார். தன்னுடைய சமையலறையிலேயே பர்ஃப்யூம் ஃபார்முலாவை உருவாக்கினார். ஆய்வகப் பரிசோதனையில் தன்னுடைய தயாரிப்பின் பாதுகாப்பையும் உறுதிசெய்து கொண்டார்.

தொழில்முனைவோர் பயிற்சி மையத்தில் அகர்வாலின் முயற்சிக்கு ஆலோசனைகளை வழங்கி முழுமையான ஆதரவளித்தார்கள். தற்போது பெல்லா என்ற பெயரில் தன்னுடைய நிறுவனத்தைத் தொடங்கி சமூக வலைத்தளங்கள் மூலமாக விற்பனை செய்து வருகிறார். மும்பையில் உள்ள தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 500 பாட்டில்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து தான் பர்ஃப்யூம் தயாரிக்கப்படுகின்றன. தற்சமயம் தன்னுடைய பெல்லா நிறுவனம் மூலமாக இருவேறு நறுமணங்களில் வாசனைப் பொருட்கள் விற்பனை செய்துவருகிறார். தன்னுடைய தயாரிப்புகள் முற்றிலும் இயற்கை சார்ந்த தயாரிப்புகளாக,சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது. கைகளால் தயாரிக்கப்படுகிறது என்று தயாரிப்பு பற்றி விவரிக்கிறார் அர்யாஹி அகர்வால். மேலும் அவருடைய நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே மாதத்தில் அதிக வருவாய் ஈட்டியுள்ளது. இதில் 65 சதவீத லாபமும் கிடைத்துள்ளது.

குறைந்த விலையில் ஆர்கானிக் தயாரிப்புடன், எந்தவிதமான ரசாயனங்களும் இதில் சேர்க்கப்படுவதில்லை. இளைஞர்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது. இதுபோன்ற அம்சங்களால் மற்ற நிறுவனங்களில் இருந்து தனித்தன்மையுடன் பெல்லா நிறுவனம் விளங்குகிறது, என்கிறார். இளம் வயதிலேயே வெற்றிகரமான தொழில்முனைவோராக திகழ்ந்து கொண்டு இருக்கும் அர்யாஹி அகர்வால். 14 வயதில் இந்த வெற்றியை பல்வேறு சவால்களைத் தாண்டியே சாதித்து உள்ளார்.

தன்னுடைய நிறுவனத்தின் தயாரிப்பை சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்ய அவருடைய அம்மா மற்றும் அப்பா உதவியுள்ளார்கள். மேலும் நிறுவனம் தொடங்குவதற்காக ஆரம்ப முதலீட்டுத் தொகையாக 20,000 ரூபாய் அவரது அப்பா கொடுத்துள்ளார்.அது மட்டுமல்ல நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கவும், மூலப்பொருட்களை வழங்கும் விற்பனையாளார்களைச் சரியாகக் கையாளவும் அவரது தந்தை உதவிவருகிறார்.

சமூக வலைத்தளங்கள் மூலம் தன்னுடைய நிறுவனத்தின் தயாரிப்புகளை மேலும் சிறப்பாக விளம்பரப்படுத்த அர்யாஹி அகர்வால் திட்டமிட்டிருக்கிறார். எல்லோர் வீட்டிலும் விரும்பி வாங்கப்படும் பிராண்டாக தன்னுடைய நிறுவனத்தின் பொருட்கள் மாறவேண்டும் என்பதே அவருடைய கனவு. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அர்யாஹி, படிப்பில் கவனம் செலுத்துவதுடன் நிறுவனத்தின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதிலும் புதிய தயாரிப்புகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இளம்வயதிலேயே தொழில்முனைவோராக உருவான அகர்வாலின் வாழ்க்கை இன்றைய மாணவ சமுதாயத்துக்கு ஒரு உன்னத பாடமாகும். இவரைப் போலவே வாழ்வின் எல்லாச் சூழல்களிலும் நேர்மறை எண்ணத்துடன் செயல்பட்டு, நம் மனதில் தோன்றும் புதிய சிந்தனைகளை விரிவடையச் செய்து, புதிய வாய்ப்புகளை உருவாக்கி சாதனை புரியுங்கள், வாழ்த்துகள்.

The post புதிய சிந்தனையுடன்… புதிய வாய்ப்புகளை உருவாக்குங்கள்! appeared first on Dinakaran.

Read Entire Article