கல்விதான் அனைத்துச் சமூக மாற்றத்திற்கும் அடிப்படை, சில வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரையில் உலகப் புகழ்பெற்ற பல நிறுவனங்கள் எங்களுக்கு தொழில்கல்வி,பட்டப் படிப்பு படித்தவர்கள் மட்டும்தான் தேவை என்று கூறவில்லை. நல்ல திறமையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உடைய இளைஞர்கள் வேண்டும் என்கின்றனர். தங்களே பயிற்சியும் அளித்து வேலையும் கொடுக்கின்றனர். காரணம், ஒவ்வொரு நாளும் புதிய, புதிய தொழில்நுட்பங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.இயந்திரங்கள் மூலம் மனிதர்கள் பணியாற்றிய காலம் மாறி ரோபோக்களோடு போட்டியிட்டு பணி செய்யும் காலம் உருவாகி இருக்கின்றது. அந்த அளவுக்கு இளைஞர்கள் தங்களைத் தாங்களே கூர்மைப்படுத்த வேண்டும். இன்றைய இளைஞர்களால் நிச்சயமாக முடியும். அவர்கள் ஒவ்வொருவரிடமும் பல்வேறு திறமைகள் உள்ளன.அவற்றை வெளியே கொண்டு வந்தால் அனைவரும் சாதனையாளர்களே.மலையின் உச்சியில் அழகிய ரோஜா மலர் இருக்கலாம். அந்த மலையில் இருக்கும் ரோஜாவின் நறுமணத்தை நாம் அனுபவிக்க முடியாது. நம் அருகில் இருந்தால்தான் நாம் அனுபவிக்க முடியும். அதுபோல் திறமையானவர், திறமையானவர் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை.சாதித்து காட்டுவதில் தான் திறமை வெளிப்படுகிறது. தூக்கணாங்குருவி மிக அழகாக கூடு கட்டுகிறது. அது எந்தப் பொறியியல் கல்லூரியிலும் படித்ததில்லை, அதுபோல்தான் நாம் ஒவ்வொருவருடைய மரபணுவிலும் திறமை உள்ளது. நாம் முயன்றால் சாதனைகள் படைக்கலாம்.ஒரு காக்கை கூடு இருந்தது. அதில் குயில் வந்து முட்டையிட்டுவிட்டு போய்விடுகிறது.காக்கை,குயிலின் முட்டையைத் தனது முட்டை என்று நினைத்துக் கொண்டு அடைகாக்கின்றது.
குயில் குஞ்சு தன் முட்டையிலிருந்து பொரிந்து வெளியே வந்துவிடுகிறது. தன் இனத்தோடு சேர வேண்டும் என்ற நினைப்பே இல்லாமல் அது வளர்கிறது. உண்மையிலேயே அது குயிலாக இருந்தபோதும் அதற்கு கூவத் தெரியவில்லை. தன்னை அது உண்மையான காகம் என்றே நினைத்துக் கொண்டது.கூவ முடிந்தும் அது கூவம் முயற்சி செய்யாமல் இருந்தது. ஏனென்றால் அது வளர்ந்த சூழ்நிலை அப்படி. அதன் திறமை என்னவென்று அதற்குத் தெரியவில்லை.இந்தக் குயிலைப் போன்றுதான் பெரும்பான்மையான பெண்களின் வாழ்க்கையும் உள்ளது. குயிலாக பிறந்தும் குடும்ப வாழ்க்கையில் தங்களது திறமைகளைத் தொலைத்துவிட்டு காக்கையாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு தன் திறமைகளை வெளிப்படுத்தி இந்த சமூகத்தில் சாதிக்க முடியாதா? இந்த கேள்விகளுக்கெல்லாம் முடியும் என்கிறார் ஒரு சாதனைப் பெண்மணி. அவர் தான் சென்னையை சேர்ந்த ஷம்சிஹா .பள்ளிப்படிப்பை முடித்த பின் ஷாம்சிஹா கல்லூரி படிப்பில் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்து படிக்க முடிவு செய்தார். சென்னை ஆவடியில் உள்ள ஆலீம் முகமது சாலிக் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பைத் தேர்ந்தெடுத்து படித்தார். படிக்கும்போது தியரி வகுப்புகளை விட பிராக்டிகல் வகுப்புகள்தான் ஷாம்சிஹாவிற்கு மிகவும் பிடித்தமானவை. மற்ற மாணவர்களை விட பிராக்டிகல் வகுப்பில் ஷம்சிஹா சிறந்து விளங்கினார்.கல்லூரியில் படிக்கும்போதே தனது துறை சார்ந்த பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று தனது திறமைகளை வெளிப்படுத்தி திறன்களை மேம்படுத்திக் கொண்டார்.
இருந்தபோதும் செமஸ்டர் தேர்வுகளில் ஒரு சில தியரி பாடங்களில் தேர்ச்சி பெறாமல் போனார். இந்த நிலையில் கல்லூரியின் நிர்வாகி சேகுஜமாலுதீன் அவர்களும் பேராசிரியர்களும் படிப்பைத் தாண்டி பல்வேறு போட்டியில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்தும் ஷம்சிஹாவை அவ்வப்போது பாராட்டி படிப்பு முடித்து பட்டம் பெற்றால் நீ இன்னும் நிறைய சாதிக்கலாம் என்று ஊக்கப்படுத்தினார்கள். அவர்களின் ஊக்கத்தின் பலனால் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பயிற்சியும் எடுத்துக் கொண்டு பாடங்களில் தேர்ச்சி பெற்று பொறியியல் பட்டம் பெற்றார்.பொறியியல் பட்டம் பெற்ற ஷம்சிஹா ஒரு நிறுவனத்தில் சென்று வேலை பார்க்க மனமில்லாமல் தானே ஒரு நிறுவனத்தை உருவாக்கி பலருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரக்கூடிய தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என்ற உயர்ந்த இலக்கைத் தீர்மானித்தார்.திருமணத்திற்குப் பின் ஷம்சிஹாவின் உயர்ந்த இலக்கிற்கு அவரது கணவர் பெரிதும் உறுதுணையாக இருந்தார். இதுதான் ஷம்சிகாவின் வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கணவனும் மனைவியும் சேர்ந்து ட்ரீம் ஒன் ஸ்டூடியோ என்ற நிறுவனத்தை உருவாக்கினார்கள்.நமது நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட முற்றிலும் வேறுபட்டதாக இருக்க வேண்டும். நவீன தொழில்நுட்பம் சார்ந்த புதிய சிந்தனையுடன் மக்களை கவரக்கூடிய தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தார்கள். AR,VR, மற்றும் XR தொழில்நுட்பத்தின் மூலமாக முப்பரிமாண ஒளிப்படவியல் மற்றும் தொடு காட்சி அமைப்புகளை உருவாக்கி புதிய வெற்றிகளைப் பெற முடிவு செய்தார்கள்.ஆனால் நினைத்தது போல் நடந்தால் வாழ்வில் என்ன சுவாரசியம் இருக்கின்றது. தொடக்க காலத்தில் சிறப்பான வாய்ப்புகள் அமையவில்லை. இருந்தபோதும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் விடாமுயற்சி செய்தார்கள். தொடர் முயற்சியின் பலனால் தொடர் வாய்ப்புகளும் கிடைத்தது. நிறுவனமும் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்றது.
இவர்களின் வெற்றிப் பாதையின் முக்கிய அங்கமாகத் தமிழ்நாடு தோட்டக்கலை சார்பாகத் தமிழக முதல்வரால் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் இவர்களது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முப்பரிமாண ஒளிப்படவியல் அரங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக ஹாலோகிராப் என்ற நவீன தொழில்நுட்பத்தின் மூலம் உயர்தரத் தோட்டக்கலை அருங்காட்சியகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.தொடு திரை மலர்கள் (தீம் அன்ரியல்) 360டிகிரி அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திரையில் உள்ள மலரைத் தொட்டால் பூத்துக் குலுங்கும் மலர்கள் சிதறுவது போல் நவீன தொழில்நுட்பம் கையாளப்பட்டுள்ளது.இந்த அரங்கை சிறப்பாக அமைத்ததற்காக ஷம்சிஹா தமிழ்நாடு முதல்வரிடம் சான்றிதழ் பெற்று பாராட்டைப் பெற்றுள்ளார். மேலும் அவர் படித்த ஏ.எம்.எஸ் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் அமைப்பு சார்பாக நடைபெற்ற விருது விழாவில் சிறந்த மாணவி என்ற விருதைப் பெற்று கல்லூரி தாளாளரிடம் பாராட்டையும் பெற்றுள்ளார்.
ஷம்சிஹா பொழுதுபோக்கு அம்சம் கொண்ட புதிய தொழில்நுட்பம் சார்ந்த இந்த முயற்சியைத் தொடங்கியிருந்தபோதும் இது ஒரு வலுவான நிறுவனமாகவே மாறியிருக்கிறது.அது மட்டுமல்ல,புதிதாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு ஆலோசனைகளையும் கூறிவருகிறார் ஷம்சிஹா.புதிய சிந்தனைகளுடன் தொழில் முயற்சியைத் தொடங்கி நூறு சதவீத ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துங்கள்.என்றாவது ஒரு நாள் நீங்களும் நிச்சயம் புதிய வெற்றியை பெறுவீர்கள். தோல்வியைக் கண்டு துவண்டு ஒரு போதும் மனம் தளராதீர்கள் என்கிறார் ஷம்சிஹா. தொழில் முனைவோராக வேண்டும் என்று சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் இவருடைய வாழ்க்கை ஒரு ஊக்கப்படுத்தும்.
The post புதிய சிந்தனை! புதிய வெற்றி! appeared first on Dinakaran.