புதிய சட்டத்தை வகுக்க உத்தரவிட்ட நிலையில் ஜாமீனுக்கு தனிச்சட்டம் அவசியமில்லை: சுப்ரீம் கோர்ட்டில் ஒன்றிய அரசு தகவல்

1 day ago 1

புதுடெல்லி: ஜாமீனுக்கு என்று தனி சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்க மறுத்து ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. குற்ற வழக்கு ஒன்றில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தியேந்தர் குமார் என்பவர் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், ‘சந்தியேந்தர் குமார் வழக்கை பொருத்தமட்டில் விசாரணை முடிய கால தாமதம் ஆகும். அதுவரை குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் இருக்க வேண்டிய அவசியமில்லை’ எனக்கூறி அவருக்கு ஜாமீன் வழங்கியது.

மேலும், ‘தற்போது வழக்கு விசாரணைகள் என்பது அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே முந்தைய கைது நடவடிக்கைகள், கைது செய்யும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தல், குற்றத்துக்கான தண்டனை அதிகபட்சமாக ஏழு ஆண்டுகளுக்குள்ளாக இருக்கும் வழக்குகளில் குற்றவியல் நடைமுறைசட்ட பிரிவுகள் 41 மற்றும் 41ஏ உள்ளிட்டவற்றை கடைபிடிக்க விசாரணை அமைப்புகள் தவறுகிறது. எனவே கீழமை நீதிமன்றங்களுக்கு பெறுப்பேற்க வைக்கும் வகையில் தனியாக ஜாமீன் சட்டத்தை ஒன்றிய அரசு வரையறுக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் ஒன்றிய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘ஜாமீன் தற்போது மறுசீரமைக்கப்பட்ட குற்றவியல் சட்டங்களில் விசாரணைக்கு முந்தைய கைது உள்ளிட்டவற்றில் ஏற்படும் சிக்கல்களை களைய போதிய சரத்துக்கள் உள்ளன. குறிப்பாக, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்கிதா சட்டத்தின் 35வது பகுதி என்பது ஜாமீன், ஜாமீனுக்கான உத்தரவாதம், பெண்கள், சிறார்கள், பலவீனமானவர்கள் உள்ளிட்டோருக்கான சட்டப்பூர்வ பாதுகாப்புகள் உள்ளடக்கிய விவகாரங்களை விரிவாக கையாண்டுள்ளது. எனவே ஜாமீன், ஜாமீன் உத்தரவாதம், ஜாமீன் நடைமுறைகள் உள்ளிட்டவற்றுக்கென தனியாக சட்டம் இயற்ற வேண்டியது அவசியமில்லை’ என்று தெரிவித்துள்ளது.

The post புதிய சட்டத்தை வகுக்க உத்தரவிட்ட நிலையில் ஜாமீனுக்கு தனிச்சட்டம் அவசியமில்லை: சுப்ரீம் கோர்ட்டில் ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article