சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது சவரன் ரூ.57 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.57,120க்கும், கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.7,140க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 4ம்தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.56,960க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை நேற்று முன்தினம் சற்று குறைந்திருந்த நிலையில், மீண்டும் நேற்று விலை உயர்ந்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து, ரூ.57,120க்கும், கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.7,140க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை முதல் முறையாக ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கம் விலை ரூ.47 ஆயிரம் என்ற அளவில் இருந்த நிலையில், தற்போது ரூ.57 ஆயிரத்தை கடந்துள்ளது.
அதாவது, கடந்த 10 மாதங்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.10,000 உயர்ந்துள்ளது. தங்கம் விலை உயர்வது எதனால்?: அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி, வட்டி வகிதத்தை 0.5 சதவீதம் குறைத்திருப்பதால் பொதுமக்கள் தங்களது வங்கி வைப்பு நிதியை அதில் இருந்து எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. அதேபோன்று, அமெரிக்காவில் கடன் பத்திரங்கள் விற்பனையும் குறைந்துள்ளது. சீனப் பங்குச்சந்தை சலுகைகளையும் தாண்டி அவர்கள் முதலீட்டுக்காக தங்கத்தை நாடுவது அதிகரித்துள்ளது. இதுபோன்ற தங்கத்தின் மீதான முதலீடுகள் உலக அளவிலும் அதிகரித்துள்ளதால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
The post புதிய உச்சம் தொட்டது ஒரு சவரன் தங்கம் ரூ.57 ஆயிரத்தை கடந்தது: 10 மாதத்தில் சவரனுக்கு ரூ.10 ஆயிரம் உயர்வு appeared first on Dinakaran.