புதிய அமைச்சராக செந்தில் பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் பதவியேற்பு!

2 hours ago 4

சென்னை: சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா தொடங்கியது. புதிய அமைச்சராக சேலம் ஆர்.ராஜேந்திரன், ஆவடி சா.மு.நாசர், கோவி.செழியன், செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டனர்.

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவார், சிலர் நீக்கப்பட்டு, புதியவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று பல மாதங்களாக பேசப்பட்டு வந்தன. இது குறித்து பேட்டியளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்று அறிவித்தார். அதற்கு ஏற்றார்போல, முதல்வர் அலுவலகத்தில் இருந்து அமைச்சரவை மாற்றம் தொடர்பான கடிதம் கவர்னர் ஆர்.என்.ரவியின் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் தென் மாவட்ட சுற்றுப் பயணத்தில் இருந்த கவர்னர், நேற்று இரவு சென்னை திரும்பியதும், கடிதம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கவர்னர் மாளிகை நேற்று இரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வரின் பரிந்துரையின் பேரில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராகிறார். மேலும், செந்தில்பாலாஜி, கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

மேலும், அமைச்சர்களாக உள்ள மனோ தங்கராஜ் (பால் வளம்), செஞ்சி மஸ்தான் (சிறுபான்மையினர் நலம், வெளிநாட்டு வாழ் தமிழர் நலம்), ராமச்சந்திரன் (சுற்றுலாத்துறை) ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்படுகின்றனர். அதோடு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் இலாகா மாற்றப்பட்டு, அவர் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்படுகிறார். சுற்றுச்சூழல்துறை அமைச்சராக உள்ள மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜ், மனித வள மேம்பாட்டுத்துறை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை அமைச்சராகவும், வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பன், பல்வளத்துறை மற்றும் காதி மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சராகவும், நிதித்துறை மற்றும் மின்வாரியம், மனித வளத்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் நிதித்துறை, தொல்லியல் துறைகளையும் கவனிப்பார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா தொடங்கியது. புதிய அமைச்சராக சேலம் ஆர்.ராஜேந்திரன், ஆவடி சா.மு.நாசர், கோவி.செழியன், செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டனர். அமைச்சராக பதவியேற்ற 4 பேருக்கும் இலாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அமைச்சர் கோவி.செழியனுக்கு உயர்கல்வித்துறை பதவியும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை பதவியும், அமைச்சர் ஆர்.ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை பதவியும், அமைச்சர் சா.மு.நாசருக்கு சிறுபான்மை நலத்துறை பதவியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

The post புதிய அமைச்சராக செந்தில் பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் பதவியேற்பு! appeared first on Dinakaran.

Read Entire Article