புதர்மண்டி கிடக்கும் சின்னம்பேடு பெரியஏரி கால்வாயை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

2 weeks ago 5

ஊத்துக்கோட்டை: புதர்மண்டி கிடக்கும் சின்னம்பேடு பெரிய ஏரி கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் – சின்னம்பேடு கிராமம் இடைப்பட்ட பகுதியில் ராள்ளப்பாடி, ஜி.ஆர்.கண்டிகை, குமரபேட்டை, பனையஞ்சேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விளை நிலங்களில் விவசாயிகள் நெல், பூ செடி, கரும்பு போன்றவற்றை பயிர் செய்து வருகிறார்கள். விவசாய தண்ணீர் தேவைக்காக பெரிய பாளையம் பாளேஸ்வரம் பகுதியில் தடுப்பணை கட்டி தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டு சின்னம்பேடு பெரிய ஏரிக்கு கால்வாய் மூலம் அனுப்பப்படுகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் பயன்பெற்று வந்தனர்.

இந்நிலையில் ஏரி கால்வாய் கடந்த 2 வருடத்திற்கும் மேலாக புதர்மண்டி தடமே தெரியாமல் மறைந்துவிட்டது, மேலும் கால்வாய் ஓரங்களில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் ராள்ளபாடி, பனையஞ்சேரி பகுதிகளில் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது. எனவே, கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், ”பெரியபாளையம் – பாளேஸ்வரம் பகுதியில் இருந்து சின்னம்பேடு பெரிய ஏரிக்கு செல்லும் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டால் பெரிதும் பயன்பெறுவோம். தற்போது ஏரி கால்வாய் புதர் மண்டி தூர்ந்துவிட்டது. கடந்த 2 வருடத்திற்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிக்கு செல்லும் கால்வாயை பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைத்தனர். ஆனாலும் புதர்மண்டி காணப்படுகிறது. எனவே, புதர்மண்டி கிடக்கும் சின்னம்பேடு பெரிய ஏரி கால்வாயை தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்றி தந்தால் பயனாக இருக்கும்” என்றனர்.

The post புதர்மண்டி கிடக்கும் சின்னம்பேடு பெரியஏரி கால்வாயை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article