திருவள்ளூர்: புட்லூரில் உள்ள பூங்காவனத்தம்மன் என்கிற அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வரும் 27ம் தேதி மஹா சிவராத்திரிவிழா நடைபெற உள்ளது. திருவள்ளூர் அடுத்த புட்லூரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. சென்னை – திருவள்ளூர் மார்க்கத்தில் திருவள்ளூருக்கு முந்தைய பட்லூர் ரயில் நிலையத்தில் இறங்கி செல்லக்கூடிய வகையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மட்டுமல்லாது சென்னை காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குழந்தை வரம் வேண்டி இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இந்த ஆலயத்தில் வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. மேலும் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர் கோயிலில் நீராடிவிட்டு ஈரத்துணியுடன் 11 முறை பிரகாரத்தை சுற்றி வந்து அம்மனை வணங்கி வழிபட வேண்டும்.
இதேபோல் 9 வாரம் பிரார்த்தனை செய்தால் வேண்டிய வரம் நிறைவேறும். இந்நிலையில் தனிநபர் கட்டுப்பாட்டில் இருந்த இந்த ஆலயம் கடந்த 2007ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியன்று மகா சிவராத்திரி உற்சவமும், மறுநாள் அமாவாசையன்று மயான கொள்ளை சூறை வைபவ உற்சவமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மஹா சிவராத்திரிவிழா நடைபெற உள்ளது.
அதன்படி வரும் 25ம் தேதி காலை 7 மணிக்கு மேல் பந்தல்கால் மற்றும் கொடியேற்றமும், இரவு 8 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 26ம் தேதி காலை 9 மணிக்கு மேல் மகா அபிஷேகமும், மாலை 4 மணிக்கு அம்மனுக்கு பொங்கலிட்டு படையல் இடுதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு மகா சிவராத்திரி உற்சவமும் மற்றும் அம்மன் வீதி உலாவருதலும் நடைபெற உள்ளது. இரவு 9 மணிக்கு ஆதிகாஞ்சனா நாடகமன்றம் குழுவினரின் வினை தீர்ப்பாள் வேப்பிலைக்காரி சமூக நாடகமும் நடைபெற உள்ளது.
பிறகு 27ம் தேதி காலை 8 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகமும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், பிற்பகல் 1 மணிக்கு அம்மன் மயான கொள்ளை சூறை வைபவ உற்சவம் நடைபெற்று திருவீதி உலா நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு புட்லூர் காலனி பகுதியில் பொங்கலிட்டு படையலிடுதலும், புட்லூர் கிராம பகுதியில் பொங்கலிட்டு படையலிடுதலும், இறுதியாக ராமாபுரம் காலனி பகுதியில் பொங்கலிட்டு படையிடுதலும் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் விக்னேஷ் மற்றும் கிராம பொது மக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
The post புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வரும் 27ம் தேதி சிவராத்திரி விழா appeared first on Dinakaran.