புகையிலை, குட்கா விற்பனையை தடுக்க குமரியில் 20 ஆயிரம் கடைகளில் உறுதிமொழி போஸ்டர்கள்

1 month ago 6

* மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்பு துறை அதிரடி திட்டம்

நாகர்கோவில் : நாகர்கோவிலில் உள்ள கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை, குட்கா, கூல் லிப் போன்ற போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் கலெக்டர் அழகு மீனா, எஸ்.பி. சுந்தரவதனம் மேற்பார்வையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பள்ளி மாணவர்கள் இடையே போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கும் வகையிலும், போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி பள்ளிகளில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது தவிர தற்போது கடைகளிலும் போதை பொருட்கள் விற்பனை செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழி போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்பு துறை, உள்ளாட்சி நிர்வாகம் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சியில் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா மேற்பார்வையில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாக மாநகராட்சி பகுதியில் சுமார் 2 ஆயிரம் கடைகளில் உறுதிமொழி போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. நாகர்கோவிலில் நேற்று மாநகர உணவு பாதுகாப்பு அலுவலர் குமார் பாண்டியன், சுகாதார அலுவலர்கள் பகவதி பெருமாள், ராஜாராம், ராஜா, முருகன் மற்றும் பணியாளர்கள் நாகர்கோவில் நாகராஜா கோயில் கீழரத வீதி, மீனாட்சிபுரம், அரசமூடு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் போதை பொருள் விற்பனை செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழி ேபாஸ்டர் ஒட்டினர்.

மீறி விற்பனை செய்தால் என்னென்ன தண்டனைகள், அபராதம் உள்ளிட்டவை குறித்தும் இதில் விளக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த நம்பருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். பின்னர் கலைவாணர் என்.எஸ்.கே. உயர் நிலைபள்ளியில் மாணவ, மாணவிகளிடம் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளிகளில் உள்ள கழிவறைகளில் சோதனை செய்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், குமரி மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி புகையிலை பொருட்கள் விற்பனை இல்லாத குமரி என்ற நிலையை எட்டும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக 20 ஆயிரம் கடைகளில் உறுதிமொழி போஸ்டர்கள் ஒட்ட திட்டமிட்டப்பட்டு, பகுதி, பகுதியாக இதற்கான பணிகள் நடக்கின்றன என்றனர்.

The post புகையிலை, குட்கா விற்பனையை தடுக்க குமரியில் 20 ஆயிரம் கடைகளில் உறுதிமொழி போஸ்டர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article