
பாட்னா,
பீகாரில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க., ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, பிரசார யுக்திகளை வகுத்தல் என தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் சார்பில் வீடு வீடாக சென்று வாக்காளர் சரிபார்ப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வாக்காளர் பட்டியலை இறுதி செய்வதற்கான இந்த பணியில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் ஆகிய இந்தியாவின் அண்டை நாடுகளை சேர்ந்தவர்கள் பீகாரில் வசித்து வருவதும், அவர்கள் ஆதார் அட்டை, குடியுரிமைக்கான சான்றிதழ்களை வாங்கி வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. சட்டவிரோத வழிகளில், தங்களுடைய பெயரில் ரேசன் கார்டுகளையும் அவர்கள் வாங்கி வைத்துள்ளனர். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய வழக்குகள் ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 30-ந்தேதி வரை விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. இந்த வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவர்களுடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.