பாட்னா,
பீகார் மாநிலத்தில் உள்ள பங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கண்ணய்யா மஹடோ. இவருக்கு கீதா தேவி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். ஆட்டோ டிரைவரான கண்ணய்யா மஹடோ, தனது குடும்ப தேவைகளுக்காக சில தனியார் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளார்.
ஆனால் அந்த கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்த முடியாததால், சம்பந்தப்பட்ட வங்கிகளைச் சேர்ந்த ஏஜெண்ட்டுகள் கண்ணய்யாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த கண்ணய்யா, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தப்படும் விஷ மாத்திரைகளை தானும் சாப்பிட்டு, தனது மனைவி மற்றும் குழந்தைகளையும் சாப்பிட வைத்துள்ளார். அந்த மாத்திரையை கண்ணய்யாவின் 8 வயது மகன் ராகேஷ் குமார் சாப்பிடாமல் துப்பியதால் அதிர்ஷ்டவசமாக அவனுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. மற்ற 4 பேரும் விஷ மாத்திரையை சாப்பிட்டுள்ளனர்.
இந்த விவகாரம் அக்கம்பத்தினருக்கு தெரியவந்த நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணய்யா உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.