சென்னை: திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த சனிக்கிழமை மாலை தனி வகுப்பு முடித்துவிட்டு, ஐஸ்அவுஸ் டாக்டர் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் கோயில் அருகே செல்போனில் பேசி கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டரில் வந்த 2 பேர் திடீரென மாணவியை வழிமறித்து அவரது செல்போனை பறித்து தப்பினர். மாணவி புகாரின்படி ஐஸ்அவுஸ் போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய இளஞ்சிறார் தனது நண்பருடன் சேர்ந்து செல்போன் பறித்தது தெரியவந்தது. இளஞ்சிறார் மீது ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கு இருப்பதும் தெரியவந்தது. போலீசார் இளஞ்சிறாரை பிடித்து சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தி போலீசார் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். அவரிடம் இருந்து செல்போன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள அவரது நண்பரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
The post பிளஸ்2 மாணவியிடம் செல்போன் பறிப்பு சிறார் நீதிமன்றத்தில் சிறுவன் ஆஜர் appeared first on Dinakaran.