
கடலூர்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராயர் மகன் வெங்கடேசன் (வயது 42). இவர் அதே பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக டியூசன் சென்டர் வைத்து மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகிறார். இங்கு விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி கடந்த சில நாட்களாக படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று டியூசனுக்கு வந்த மாணவிக்கு, வெங்கடேசன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
தொடர்ந்து இதுகுறித்து மாணவி விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.