பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள்: உயர்கல்வி அதிகாரிகள் தகவல்

3 hours ago 2

மதுரை, மே 16: தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில் உள்ள 159 பாடப்பிரிவுகளில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 345 மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு மே 27ம் தேதி வரை பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த பணிகளை மாணவ, மாணவியர் மேற்கொண்டு வருகின்றனர். இதில் பல்வேறு விஷயங்களை மாணவ, மாணவிகள் கவனிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அரசு கல்லூரிகளில் பிஏ தமிழ் இலக்கியம் மற்றும் பி.லிட் படிக்க விரும்புவோருக்கான தரவரிசை பட்டியல், தமிழில் அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தயாரிக்கப்படும். இதேபோல் ஆங்கிலம் படிக்க விரும்புவோருக்கான தரவரிசை பட்டியல், அந்த பாடத்தில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் உருவாகும். இவை தவிர ஏனைய பட்டப்படிப்புகளை படிக்க விரும்புவோருக்கான தர வரிசை பட்டியல், மொழிப்பாடங்கள் தவிர்த்து, பிற பாடங்களில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் கூட்டுத்தொகை அடிப்படையில் தயாராகும்.

இதன் அடிப்படையில் ஜூன் மாதம் கவுன்சிலிங் நடத்தப்பட்டு, ஒவ்வொருவருக்கும் அவருக்கான கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கப்படும். ஒருவர் கணிதத்தில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார் என்பதால், கண்டிப்பாக அவர் விரும்பும் கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என, கருத முடியாது. ஏனெனில் பிற பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தால், அதில் பின்னடைவு ஏற்படலாம். இதே நிலைதான் அனைத்து பாடங்களுக்கும்.

ஒரு விண்ணப்பத்தில் எத்தனை கல்லூரிகளில் எத்தனை பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது இணையதளத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை கவனமுடன் படிக்க வேண்டும். பல்வேறு பாடங்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் முன்னுரிமை கொடுக்க வாய்ப்புள்ளது. இதன்படி ஒரு கல்லூரியில் இயற்பியல் முதல் விருப்பம், வேதியியல் இரண்டாம் விருப்பம், கணிதம் மூன்றாம் விருப்பம், கணினி அறிவியல் நான்காம் விருப்பம் என வரிசையாக தேர்வு செய்யலாம். கல்லூரிகளையும் இதே அடிப்படையில் முடிவு செய்யலாம். கவுன்சிலிங் நடைபெறும்போது முதலில் நீங்கள் விரும்பும் கல்லூரியில் விருப்ப பாடத்தில் வாய்ப்பு நழுவினால், அடுத்த பாடப்பிரிவை தேர்வு செய்யலாம். இல்லாவிடில் இரண்டாவது விருப்பமாக உள்ள கல்லூரியில் விருப்ப பாடத்திலேயே சேரவும் வாய்ப்புள்ளது.

சில அரசு கல்லூரிகளில் ஒரே பாடத்தில் இரு பிரிவுகளில் (பேட்ச்) மாணவர் சேர்க்கை நடைபெறும். (உதாரணமாக ஒரு கல்லூரியில் பிஎஸ்.சி கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் இரு பிரிவுகளாக நடத்தப்படும்) இதுபோன்ற கல்லூரிகளில் இரு பேட்ச்களுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பேட்சில் மட்டும் விண்ணப்பித்து, உங்களுக்கு முந்தைய மதிப்பெண்ணில் முதல் பேட்ச் முடிந்தால், அடுத்த பேட்சில் நீங்கள் முதலிடத்தில் இருப்பீர்கள். அதுபோல் விண்ணப்பிக்காவிட்டால் அந்த வாய்ப்பு மறுக்கப்படும். உங்களைவிட குறைந்த மதிப்பெண் ெபற்றவர், இரு பேட்சிலும் விண்ணப்பித்திருந்தால், அவருக்கு இரண்டாவது பிரிவில் கல்லூரியில் சேர்க்கை நடைபெறும். எனவே இதில் கவனம் அவசியம்.

ஆன்லைன் விண்ணப்பத்தின் முடிவில், அதனை சமர்ப்பிக்கும் முன்பாக நீங்கள் விரும்பிய அடிப்படையில் கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதா என்பதை, சரிபார்க்க வேண்டும். உங்கள் விண்ணப்பத்தில் ஏற்கனவே விருப்ப கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை முறையாக தேர்வு செய்யாமல் இருந்தால், அதே விண்ணப்பத்தினை மீண்டும் திறந்து அவற்றை சரி செய்யலாம். அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க ஆன்லைன் மையத்திற்கு செல்லும்போது உங்கள் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், கணினி வாயிலாக பெற்ற சாதிச்சான்று, ஆதார் கார்டு, பிளஸ் 2 எமிஸ் எண், பெற்றோரின் வருவாய் சான்றிதழ், குடும்பத்தின் முதல் பட்டதாரி என்பதற்கான சான்று, மாற்றுத்திறனாளியாக இருந்தால் ஒன்றிய, மாநில அரசுகளின் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல வேண்டும்.

விண்ணப்பித்த பிறகு ஆன்லைன் மையங்கள் சார்பில் அனைத்து விபரங்களும் அடங்கிய நகல் வழங்கப்படும். இதனை எந்த கல்லூரியிலும் நீங்கள் கொடுக்க வேண்டியதில்லை. கவுன்சிலிங் அழைப்பு வரும்வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இந்த வழிமுறைகளை கவனத்தில் கொண்டு விரும்பிய கல்லூரிகளில் பட்டப்படிப்புக்கான வாய்ப்பு பெற்று வெற்றி பெறலாம். இவ்வாறு கூறினார்.

The post பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள்: உயர்கல்வி அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article